புதுடில்லி: உத்தர பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில், காப்பகங்களில் தங்கி உள்ள பெண்கள், சித்ரவதை செய்யப்படுவது, ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
பீஹார் மாநிலத்தின், முசாபர்பூர் நகரில் உள்ள, அரசு நிதியுதவி பெறும் காப்பகத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் சிறுமியர், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள ஆதரவற்றோர் காப்பகங்களில் தங்கியிருக்கும் பெண்கள் மற்றும் சிறுமியரின் நிலைமை குறித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, தேசிய பெண்கள் கமிஷன் உத்தரவிட்டது.
விசாரணை :
இது குறித்து ஆய்வு நடத்த, ஐந்து பேர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழு, உத்தர பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், காப்பகங்களில் தங்கியிருக்கும் பெண்கள், சிறுமியர், முதியோர் ஆகியோரிடம் விசாரணை நடத்தியது. இந்த குழு, தேசிய பெண்கள் கமிஷனிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதன் விபரம்: ஒடிசா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், 26 காப்பகங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஒரேயொரு காப்பகம் மட்டுமே, விதிமுறைப்படி செயல்படுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில், காப்பகங்களில் தங்கியிருக்கும், மன நலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, எந்தவொரு அடிப்படை வசதியும், செய்து கொடுக்கப்படவில்லை. இந்த பெண்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள காப்பகத்தில், காப்பக பாதுகாப்பாளரால், பெண்கள் சித்ரவதை செய்யப்படுகின்றனர். ஒடிசா மாநிலத்தில், காப்பகத்தில் தங்கி உள்ள ஒரு பெண், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு, ஒரு குழந்தையும் உள்ளது. ஆனால், காப்பகம் சார்பில், இவருக்கு எந்த மருந்தும் வழங்கப்படவில்லை.
பாதுகாப்பற்ற நிலை :
கர்நாடக மாநிலத்தில் உள்ள காப்பகங்களில், உளவியல் ஆலோசகர்கள் இல்லை. காப்பகத்தில் தங்கி இருப்போருக்கு, பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பெரும்பாலான காப்பகங்களில், பெண்கள் சித்ரவதை செய்யப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-dinamalar.com