மீண்டும் தகிக்கும் தூத்துக்குடி.. பசுமைத்தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மக்கள் போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கு பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளதை எதிர்த்து அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் 100 நாட்கள் போராட்டம் நடத்தினர். 100-ஆவது நாளன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணி சென்றனர்.

அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆலைக்கு தமிழக அரசு பூட்டி சீல் வைத்தது. இதை எதிர்த்து பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

அதில் ஆலை திறப்பதற்கான பணிகளில் ஈடுபடுமாறு வேதாந்தா நிறுவனத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், தமிழக அரசின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தமிழக அரசு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. அப்போது ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த மனுவை பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.

இதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஊர்வலமாக மக்கள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் ஆகியோர் மனு கொடுப்பதற்கு சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி 5 பேர் மட்டுமே மனு கொடுக்க அனுமதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

tamil.oneindia.com

TAGS: