டெல்லியில் பேருந்தில் இளம்பெண் நிர்பயா கூட்டு வன்புணர்வுக்கு ஆளான சம்பவத்தின் நினைவு நாளில் அதே டெல்லியில் மூன்று வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குழந்தையின் வீடு உள்ள கட்டடத்தின் பாதுகாவலர் அந்த குழந்தையை பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
சுய நினைவு இழந்திருந்த குழந்தையை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ‘நிர்பயா’ என புனைபெயர் சூட்டப்பட்ட பெண் டெல்லி பேருந்து ஒன்றில் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 6ஆவது ஆண்டு நினைவு நாள் அது.
- ”திருடிய இளைஞர் மீதான பாலியல் குற்றச்சாட்டு: விவரம் இல்லை என்கிறது போலீஸ்”
- காஷ்மீர்: 9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய தூண்டிய மாற்றாந்தாய்
இந்த நிர்பயா சம்பவம், பாலியல் வன்புணர்வுகள் குறித்து நாடு முழுதும் பெரும் கோபத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதோடு, அதன் விளைவாக கடுமையான சட்டம் இயற்றப்படவும் வழிவகுத்தது.
அதே டெல்லியில், அந்த சம்பவத்தின் நினைவு நாளில் 3 வயது குழந்தை பாலியல் தாக்குதலுக்கு உள்ளான சம்பவத்தின் மூலம் இந்த மாநகரம் நிர்பயாவை கைவிட்டதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் டெல்லி பெண்கள் ஆணையர் ஸ்வாதி மாலிவால். டெல்லி பின்டாபூரில் நடந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், அக்குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் பதிவிட்டார்.
குழந்தையின் உடல் நிலை குறித்து எந்தத் தெளிவும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் குறித்து தெரிந்ததும், அருகில் வசிக்கும் மக்கள் ஒன்றுகூடி குற்றம்சாட்டப்பட்ட நபரை தாக்கினர் என டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளித்த பிறகே குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ததாக போலீஸ் கூறுவதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் தினக்கூலி வேலை செய்கிறவர்கள். சம்பவம் நடந்தபோது அவர்கள் வீட்டில் இல்லை. வீட்டுக்கு வெளியே இருந்த குழந்தைக்கு இனிப்புகள் கொடுத்து ஆசை காட்டி குற்றம்சாட்டப்பட்டவர் தூக்கிச்சென்றுள்ளார்.
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்பதற்கான (போக்ஸோ) சட்டத்தின்கீழ் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சட்டத்தின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு மரண தண்டனை வரை கிடைக்கும்.
இந்த ஆண்டில் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பல பாலியல் தாக்குதல் வழக்குகள் மக்களின் பரவலான கோபத்தைக் கிளறியுள்ளன. இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் 8 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு இலக்கானது தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது மட்டுமில்லாமல் சமூக ஊடகத்திலும் பரவலான கவலைக்கும், அரசியல் விவாதத்துக்கும் வழிவகுத்தது.
மத்தியப் பிரதேசத்தில் ஜூன் மாதம் நடந்த ஏழு வயது குழந்தை வன்புணர்வு சம்பவத்தைத் தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்தன.
தற்போது இந்த டெல்லி குழந்தை பாலியல் தாக்குதல் வழக்கும் பரவலான கோபத்துக்கு இலக்காகியுள்ளது. -BBC_Tamil