ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சில பகுதிகளில் பெண்கள் தங்களது ஆடைகளை வீடுகளில் கருப்பு கொடியாக கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளதற்கு ஆலை எதிர்ப்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். அதற்கு வலுசேர்க்கும் வகையில் சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும்” என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அறவழிப் போராட்டங்களை நடத்தப்போவதாக அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் அறிவித்துள்ளன.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்போவதாக ஆலை எதிர்ப்பாளர்கள் அறிவித்திருந்தனர்.
இதையொட்டி பண்டாரம்பட்டி, குமாரெட்டியபுரம், மீளவிட்டான், மடத்தூர், பாத்திமா நகர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் மக்கள் கருப்பு கொடியேற்றி உள்ளனர். சில தெருக்களிலும் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.
- கடத்தப்பட்ட வட கொரியப் பெண், கடத்தல்காரி ஆன கதை
- மரணத்தின் விளிம்பில் உள்ள மகனை பார்க்க யேமன் பெண்மணிக்கு அமெரிக்கா அனுமதி
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல் துறை மிரட்டி கருப்புத் துணியை பறித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கருப்புக்கொடிக்கு பதிலாக தெற்கு வீரபாண்டியபுரத்தில் பெண்கள் தங்களது ஆடைகளை கொடியில் போட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள சில கிராமங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
இது குறித்து பண்டாரம்பட்டி பகுதியை சேர்ந்த வசந்தி கூறுகையில்,
“மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்தால் 13 பேரின் உயிர்த் தியாகத்துக்கும் நாங்கள் நூறு நாட்களுக்கு மேலாக நடத்திய போரட்டத்திற்க்கும் எந்தப் பலனும் இல்லாமல் போய்விடும். பசுமைத் தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக சட்ட ரீதியாகப் போராடம் நடத்தி நிரந்திரமாக ஆலையை திறக்கவிடாமல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் முதல் சட்ட மன்ற, நாடாளுமன்றத் தேர்தலை நாங்கள் புறக்கணிப்போம். ஓட்டு கேட்டு வரும் எந்த அரசியல்வாதியையும் கிராமத்துக்குள் அனுமதிக்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.
“ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்குமாறு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினைக் கண்டித்தும், 13 பேரின் உயிர்த் தியாகத்திற்கும், லட்சியத்திற்கும் நியாயம் கோரியும் இன்று தூத்துக்குடி மாவட்ட, நகர மற்றும் கிராமப் பகுதிகளில் ஒவ்வொரு வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.
ஆனால் தமிழக காவல் துறையினர் நாங்கள் வைத்திருந்த கருப்புக் கொடிகளை பறித்துச்சென்றனர். ஆனால் நாங்கள் எங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்காமல், கருப்புக் கொடிக்குப் பதிலாக எங்கள் கிராம பெண்கள் தங்களது ஆடைகளை கொடியில் போட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்” என்று மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்த கீதா தெரிவித்தார். -BBC_Tamil