ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவது எப்போது? தலைமை அதிகாரி கருத்து

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆலையை எப்போது திறக்கமுடியும் என்பது குறித்து ஸ்டெர்லைட் காப்பரின் முதன்மை செயல் அலுவலர் பி.ராம்நாத் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

தூத்துக்குடியில் நூறு கோடி ரூபாய் செலவில் ஒரு ஸ்மார்ட் பள்ளியையும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை ஒன்றையும் அமைக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்தவாரம் அளித்த தீர்ப்பில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு தமிழக அரசு தெரிவித்த காரணங்கள் ஏற்புடையவை அல்ல என்று கூறி, ஆலை இயங்குவதற்குத் தேவையான அனுமதியை மூன்று வார காலத்திற்குள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

ஆனால், தமிழக அமைச்சர்கள் பலரும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில், பசுமை தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளை பின்பற்றி, ஆலை இயங்குவதற்கான அனுமதிகளை பெற்றால் ஆலையை மீண்டும் இயக்க முடியும் என ராம்நாத் கூறியுள்ளார்.

“இருபது ஆண்டுகளாக தூத்துக்குடியோடு இணைந்து, அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்காகவும் பகுதியின் நலத்திற்காகவும், உண்மையுடன் முதலீடு செய்திருப்பதாக” அவர் கூறினார்.

”மக்களுக்கான எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்ய மிகப் பெரிய முதலீடுகளை செய்து இந்த நலத் திட்டங்களைத் தொடங்குகிறோம். ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்தே தூத்துக்குடி, ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. எங்களது பசுமை வலைய முயற்சி, மற்ற மேம்பாட்டுத் திட்டங்களோடு பாரம்பரியத்தை மீண்டும் நிலை நிறுத்தும் ” என ராம்நாத் கூறினார்.

ஸ்டெர்லைட் காப்பர்

ஆலை திறப்பது குறித்து குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ”கடந்த ஆறு மாதங்களாக ஆலை மூடப்பட்டுள்ளது. ஆலையை மீண்டும் இயங்கும் நிலைக்கு கொண்டுவர பராமரிப்பு வேலைகளை செய்யவேண்டும். ஆலைக்கு உள்ளே செல்ல முதலில் எங்களுக்கு அனுமதி கிடைக்கவேண்டும். அதன்பின்னர், ஆலையை சீர்செய்து, பாதுகாப்பான முறையில் செயல்படுத்த சில காலம் ஆகும். எல்லா அனுமதியும் கிடைத்தால், இரண்டு மாதங்களில் ஆலையைத் திறக்கமுடியும்,” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களில் ”உங்களுடன் நான் – உங்களுக்காக ஸ்டெர்லைட்” எனும் நிகழ்வு நடத்தப்பட்டு, ஆலையின் அருலுள்ள 1,500 குடும்பங்கள் நேரடியாக ராம்நாத்துடன் உரையாடிபோது அவர்கள் ஸ்டெர்லைட் காப்பார் உருக்காலையை மீண்டும் திறக்க ஒத்துழைப்பதாகக் கூறினர் என்கிறது ஸ்டெர்லைட்.

தூத்துகுடியை பசுமையான பகுதியாக மாற்றுவதற்காக ஒரு மில்லியன் மரங்களை நடும் முயற்சியைத் தொடங்கி, நகரத்தை சுற்றி பூங்காக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறுகிறது. -BBC_Tamil

TAGS: