சென்னை: ‘வேறு வழியே இல்லை. நேர்மையாக இருப்பவர்களுக்கு அரசியல் அழுத்தம் எப்போதுமே இருந்துகொண்டுதான் இருக்கும்” என்று பொன்.மாணிக்கவேல் குறித்த கேள்விக்கு கமல் பதிலளித்து உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திரைப்பட தயாரிப்பு சங்கத்தில் நடக்கும் பிரச்னை, பொன். மாணிக்கவேல் மீதான புகார் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேலுவுக்கு நெருக்கடிகள் தரப்படுகிறதே என்ற கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர்.
உண்மை எந்த பக்கம்?
அதற்கு, “யார் சொல்வது நியாயம் என்பதை புரிந்து கொள்ள நேரம் தேவைப்படுகிறது. நேர்மை எந்த பக்கம் இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். ஒரு கருத்து கூறப்பட்டால் உடனே நாம் அந்த பக்கம் போக முடியாது.
வேற வழியே இல்லை
உண்மை என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். பொன்.மாணிக்கவேல் தனக்கு அரசு அழுத்தம் தருவதாக கூறியிருக்கிறார்.நேர்மையானவர்களுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்படுவது உண்மை தான். ஆனால் அதனை எதிர்கொண்டு தான் பணியாற்ற வேண்டும். வேறு வழியே இல்லை. இதைக் கடந்துதான் நேர்மையாக பணியாற்ற வேண்டும்’ என்று பதிலளித்தார்.
ஆரம்ப விழா
பின்னர், ‘விஜய்சேதுபதி நடித்த சீதக்காதி படத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன், கருத்து சுதந்திரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக உணருகிறீர்களா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கமல், “கருத்துச் சுதந்திரப் பிரச்சினை எனது படத்தில் தான் ஆரம்ப விழா நடத்தப்பட்டது என்று வருத்தப்பட்டுக் கொள்கிறேன்.
கருத்து சுதந்திரம்
படம் வெளியான பிறகு, அதைப் பார்த்துவிட்டுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். அதனால் என்ன பிரச்சினை, எதை சரியாகச் சொல்லவில்லை என்று சொன்னால் அது முறையானதாக இருக்கும். ஆனால் படம் வெளியாகும் முன்பே தடை என்று கேட்டால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. கருத்து சுதந்திரம் பாதிக்கப்படுவது இப்போது அதிகரித்து விட்டது. இது தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே இருக்கிறது என்று கமல் தெரிவித்தார்.