தஞ்சை பெரியகோவிலில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் தியான நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பழமை, பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில் கோயில் வளாகத்தில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. மதம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள்; கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கலாம். அதுவும் கோயிலின் தொல்லியல் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனுமதி தந்து அதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.
அண்மையில் வாழும் கலை அமைப்பை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தஞ்சை பெரியகோவிலில் தியான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு எதிராக கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், வாழும் கலை அமைப்பு சார்பில் நடத்தப்படும், 2 நாள் நிகழ்ச்சிக்கு, கோவில் அருகே பெரிய பந்தல் போடப்பட்டுள்ளது. பழம்பெருமையும், பாரம்பரியமும் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில், தனியார் அமைப்புகளுக்கு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பது கோவிலின் சிறப்பை பாதுகாக்க தவறும் நடவடிக்கையாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து வாழும் கலை அமைப்பு பெரிய கோவிலில் நடத்த இருந்த ஆன்மிக நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள், உத்தரவிட்டனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தடை உத்தரவைத் தொடர்ந்து, தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் வாழும் கலை அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் அகற்றப்பட்டன. தெற்கு பிரகாரத்தில் போடப்பட்டிருந்த பந்தல், மேடை அலங்காரம், தோரணங்கள், இருக்கைகள் போன்றவற்றை அகற்றிய வாழும் கலை அமைப்பினர் அகற்றினர். கோயிலில் நடைபெற்ற அப்புறப்படுத்தும் பணிகளை தஞ்சாவூர் வட்டாட்சியர் அருணகிரி நேரில் பார்வையிட்டார்.
இடைக்காலத்தடைக்கு வரவேற்பு தெரிவித்த பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர், இந்த தடையை நிரந்தரமாகக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இன்றைய நீதிமன்ற தீர்ப்பில், தஞ்சை பெரியகோவிலில் இனி தனியார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
-nakkheeran.in