’இந்தியாவில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது! ’-கனிமொழியின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

“இந்தியாவில் புற்று நோய் தாக்கம், கடந்த ஆறு வருடங்களில் 15.7% அதிகரித்திருப்பதாக  தகவல்கள்  வருகின்றன. இதுபற்றி அரசு கவனத்தில் கொண்டுள்ளதா? அப்படியெனில் கடந்த மூன்று வருடங்களாக  மாநில வாரியாக புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விவரங்களை அரசு தருமா? புற்றுநோயை தடுப்பதற்காக ,  புற்று நோய்க்கான சிகிச்சை செலவுகளை குறைப்பதற்காக அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் என்ன? மாநில, யூனியன் பிரதேச அளவிலான புற்றுநோய் மருத்துவ மையங்களின் செயல்பாடு  எவ்வாறு உள்ளது. புற்று நோய் மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள், சிகிச்சை மையங்களுக்கு  அரசு ஒதுக்கியுள்ள நிதி எவ்வளவு?” என்று மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி எழுத்து பூர்வமாக கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை குடும்ப நலத்துறை இணை அமைச்சர்
அனுபிரியா பட்டேல்,

 “இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய புற்று நோய் ஆராய்ச்சிகளின் முடிவாக, ‘ மூன்றாண்டுகளில் (2012-14) மக்கள் தொகை அடிப்படையிலான புற்று நோய் பதிவேடுகள், பெங்களூரு’ என்ற அறிக்கை 2016இல் வெளியிடப்பட்டது. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் குறிப்பிடத் தக்க அளவு புற்று நோய் தாக்கம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. புற்றுநோய் தாக்கத்தின் வருடாந்திர சதவிகித மாற்றமென்பது பெங்களூருவில் 0.39%  முதல் 0.93%  ஆக இருக்கிறது. சென்னையில் ஆண்களிடம் புற்றுநோய் தாக்கம் 0.38% அதிகரித்துள்ளது.

அரசிடம் உள்ள புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை 2025, 16, 17 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டில்  78,512  பேர், 2016 ஆம் ஆண்டில்  80,999  பேர் என இருந்தனர். 2017 ஆம் ஆண்டு 83,554 பேர் புற்றுநோயாளிகளாக   அதிகரித்துள்ளனர்.

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் மத்திய, மாநில மருத்துவ நிறுவனங்களால் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு மானிய விலையிலும் வழங்கப்படுகிறது. மேலும் மாநில அரசுகள் நடத்தும் புற்று நோய் தடுப்பு, விழிப்புணர்வு, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு உதவி செய்கிறது.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் தேசிய அளவில் புற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்து வதற்கான தேசிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதய நோய், பக்கவாத நோய்கள் ரீதியாகவும் இவை நடத்தப்படுகின்றன. இதன்படி மாவட்ட அளவில் புற்றுநோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் புற்றுநோய்க்கான அறிகுறிகள், அதை  தாமதமின்றி அறிந்துகொள்ளுதல்,  உறுதி செய்தல், படிநிலை தொடர்பான உரிய சிகிச்சை அளிக்கும் நிறுவனங்களை மக்களுக்கு பரிந்துரை செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்று நோய், வாய் புற்றுநோய் ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் ஆரம்ப சுகாதார நடவடிக்கைகளின் மூலமாக நாடுமுழுவதும் 215 மாவட்டங்களில் மக்களிடம் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் தொடர்பான தடுப்பு, விழிப்புணர்வு, கண்டறிதல் ஆகியவற்றுக்கான முன்னெடுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில புற்றுநோய் நிலையங்கள், யூனியன் பிரதேசங்களில் இருக்கும் யூனியன் பிரதேச புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கு  தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு செய்து தருகிறது. மாநில புற்றுநோய் நிலையங்களுக்கு அதிகபட்சமாக 120  கோடி ரூபாயும், யூனியன் பிரதேச புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கு அதிகபட்சமாக 45 கோடி ரூபாய் நிதியும் மத்திய அரசு வழங்குகிறது. இதில் மாநில அரசுகளின் பங்கு 40% ஆக இருக்கும்.

இந்த வகையில் தமிழ்நாட்டில் இருக்கும் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்துக்கு மத்திய அரசு 67.38கோடி ரூபாய் வழங்கியிருக்கிறது  இதுதவிர வட
கிழக்கு மாநிலங்களில் புற்றுநோய் தடுப்பு மையங்கள் அமைப்பதற்கு மத்திய
அரசே 90% சதவிகித மானியத்தை வழங்குகிறது. ஹரியானாவில்  தேசிய புற்று நோய் ஆய்வு நிலையம் அமைக்கவும், கொல்கத்தாவில் சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்தின் இரண்டாவது வளாகத்தை அமைக்கவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைகள் மூலமாகவும், பிரதம மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் மூலமும்  புற்றுநோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களில் உயிருக்கு அச்சுறுத்தலான நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள  தேசிய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்படுகிறது.   சுகாதாரத்துறை அமைச்சரின் புற்றுநோய் நிதியம், மாநில நோய் சிகிச்சை நிதியம் உள்ளிட்ட  அமைப்புகளில் இருந்து நிதி உதவிகள் அளிக்கப்படுகின்றன.

அமிர்த் திட்டத்தின் கீழ் மலிவு விலை மருந்து விற்பனையகங்கள் 23 மாநிலங்களில் 145 இடங்களில் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் புற்றுநோய், இதய நோய்  தொடர்பான மருந்துகள்  தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

மக்கள் மருந்தகங்களிலும் மலிவு விலை மருந்துகள் விற்கப்படுகின்றன. இந்திய மருத்துவ  ஆராய்ச்சி கவுன்சில், தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை     www.cancerindia.org.in  என்ற வலைத்தளத்தைத் தொடங்கியுள்ளன. ‘புற்றுநோய்க்கு எதிராக இந்தியா’ என்ற ஒற்றை  நோக்கத்தில் செயல்படும் இந்த வலைத் தளத்தில்  இந்தியாவில் அதிகம் தாக்கும் புற்றுநோய் வகைகள், அதுபற்றிய விழிப்புணர்வு, தடுப்பு முறைகள், சிகிச்சை முறைகள் பற்றி விரிவான வகையில் விளக்கப்பட்டிருக்கின்றன” என்று  விரிவான பதில் அளித்துள்ளார் மத்திய அமைச்சர்.

-nakkheeran.in

TAGS: