கஜா புயல் தாக்கி 35 நாட்களுக்கு மேலாகிவிட்டது. அரசு அறிவித்த நிவாரணம் 50 சதவீதம் ஊர்களுக்கு கூட வந்து சேரவில்லை. வரும் நிவாரணமும் ஒரு கிராமத்திற்கு 50 சதவீதம் பேருக்கே அனுப்பி வைக்கப்படுகிறது. புயல் பாதித்த போது 100 சதவீதம் பாதிப்பு என்று வருவாய்துறையினர் அரசுக்கு அறிக்கை கொடுத்தனர். அதனால் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. ஆனால் பாதிப்பு குறைவு தான் என்பதை காட்ட பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை குறைக்கத் தொடங்கினார்கள்.
மரங்களின் கணக்கெடுப்பு இன்னும் நடத்தி முடிக்கவில்லை. அதனால் மரங்கள் தோட்டங்களிலேயே கிடக்கிறது. இந்த நிலையில் தான் ஒவ்வொரு கிராமத்தில் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரணம் கொடு என்று மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் 50 சதவீதம் வரும் நிவாரணப் பொருளை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடு என்று ஆளுங்கட்சியினர் மொத்தமாக டோக்கன் வாங்கிச் சென்றுவிடுவதால் முழுமையாக பாதிக்கப்பட்ட கூரை, ஓட்டு வீடுகளுக்கு நிவாரணம் இல்லை. மாடி வீடுகளுக்கு 3 டோக்கன் வரை கொடுக்கப்படுகிறது. அதனால் தான் அனைவருக்கும் நிவாரணம் கொடு என்ற கோரிக்கையுடன் போராட்டங்களை கையிலெடுத்துள்ளனர் மக்கள். ஒன்று இரண்டு இடங்களில் தொடங்கிய போராட்டம் அனைத்து கிராமங்களுக்கும் பரவியுள்ளது. அதனால் போராட்டங்களை தடுக்க வழக்கு என்ற சாட்டையை எடுத்துள்ளது அரசு.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தினமும் 10 கிராமங்களில் நிவாரணம் கேட்டு மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் குண்றாண்டார்கோயில் அருகே அண்டக்குளத்தில் பாதிப் பேருக்கு நிவாரணம் மீதிப் பேருக்கு வந்தால் தருகிறோம் என்று சொன்னதால் மக்கள் போராட சாலைக்கு வந்தார்கள். அதனால் டாஸ்மாக் ஊழியர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவானது. புகார் கொடுத்தது நிவாரணம் வழங்க மனு வாங்கிய கிராம நிரவாக அலுவலர் தான். அதே போல அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் அனைவருக்கும் நிவாரணம் கொடு என்று போராடிய மக்களிடம் பேச்சுவர்த்தைக்கு அதிகாரிகள் வராததால் 4 மணி நேரம் நீடித்த நிலையில் சாலையில் பந்தல், சாலையில் சமையல் என்று சமஉ மெய்யநாதன் தலைமையில் போராட்டம் விரிவடைந்த நிலையில் வந்த அறந்தாங்கி கோட்டாச்சியர் பேச்சுவார்த்தையில் மக்கள் முழுமையாக எல்லாருக்கும் பொருள் வந்ததும் கொடுங்கள் என்று கோரிக்கை வைக்க மறுபடி எப்ப வருதோ அப்பதான் தருவோம் என்று கோட்டாச்சியர் சொல்ல மக்கள் கூச்சல் போட கிருக்கு கூட்டம் என்று சொல்லி சென்றுவிட்டார். தற்போது அந்த போராட்டத்திற்கும் வழக்கு போட முயற்சி நக்கிறது.
டிச- 10 ந் தேதி அரயப்பட்டி கிராமத்தில் கீழே தொங்கிய மின்கம்பியில் வந்த மின்சாரம் தாக்கி சுசீலா, சக்திவேல் என இருவர் மரணம் அடைந்தனர். மின்வாரிய அலட்சியத்தால் இரு உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு புயல் நிவாரணம் ரூ 10 லட்சம் வேண்டும் என்று மக்கள் போராட 8 மணி நேரத்திற்கு பிறகு அதிகாரிகள் தலையசைத்தனர். அதற்கும் வழக்கு தயாராகிறது.
ஆலங்குடி தொகுதியில் புயல் பாதித்த கிராமங்களுக்கு 99.99 சதவீதம் மின் இணைப்பு கொடுத்தாச்சு என்று தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லி வந்ததால் மின்சாரம் கிடைக்காத மக்கள் சுமார் ஆயிரம் பேர் சமஉ க்கள் ரகுபதி, மெய்யநாதன் தலைமையில் புளிச்சங்காடு கைகாட்டியில் 15 ந் தேதி மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அதிகாரிகள் விரைந்து மின்சாரம் கொடுக்க வெளியூர் மின்பணியாளர்கள் ஆயிரம் பேரை 20 ந் தேதிக்குள் அழைத்து வருவதாக ஒப்புதல் அளித்தனர். போராட்டம் நிறுத்தப்பட்டது. இந்த போராட்டம் நடத்திய மக்கள் மற்றும்மக்கள் பிரதிநிதிகள் மீது புகார் கேட்டு வருவாய் துறையினர் மிரட்டப்படுவதுடன் புகார் தரலை என்றால் இடமாறுதல் என்ற மிரட்டல் தொடங்கியுள்ளது.
அதே நாளில் கறம்பக்குடி அருகே கருக்காகுறிச்சி ஊராட்சியில் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருளில் இருந்த முதல்வர் எடப்பாடியின் சேலம் மாவட்டத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட பால் பவுடர் சாப்பிட்ட 10 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கறம்பக்குடி தாலுகா அரு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கே பணி மருத்துவர் இல்லை என்பதால் தோழர் உடையப்பன் தலைமையிலானவர்கள் மருத்துவமனைக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் அவர்கள் மீதும் வழக்கு.
20 ந் தேதி வல்லவாரி கிராமத்தில் நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தச் சென்ற மக்கள் அருகில் உள்ள நீர்நிலையில் தங்கள் மனுக்கள் மிதப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து தண்ணீரில் மிதந்த மனுக்களுடன் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய புகார் வாங்கும் முயற்சி நடக்கிறது.
புகார் தர மறுக்கும் வருவாய் துறையினரை இடமாற்றம் செய்யும் மிரட்டல் திட்டத்துடன் மாவட்ட நிர்வாகம் செயல்பட தொடங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டைக்கு ஆய்வுக்கு வந்த ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றவர்களை கைது செய்து மண்டபங்களில் வைத்துக் கொண்டு அந்த பகுதியில் பணியில் இருந்த வருவாய் துறையினரிடம் புகார் கேட்டும் தராததால் தாசில்தார், வருவாய் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்தது போல தற்போதும் தொடங்கியுள்ளது. இதனால் வருவாய் துறையினர்.. நாங்க கணக்கு எடுப்போமா இல்ல புகார் கொடுப்போமா? மன உளைச்சளை ஏற்படுத்தி மிரட்டி புகார் வாங்களாமா?என்கிறார்கள்.
பல போராட்டங்களில் முன்னின்று போராடிய ஆலங்குடி எம். எல். ஏ மெய்யநாதன் கூறும் போது.. மக்கள் ஏன் போராட வருகிறார்கள். கேட்டும் கிடைக்கவில்லை என்பதால் அவர்களின் தேவைக்காகத் தான் போராட சாலைக்கு வருகிறார்கள்.
அப்படி வரும் மக்களையும் மக்கள் பிரதிநிகளையும் வழக்கு போட்டு மிரட்ட நினைக்கிறது இந்த அரசு. இது தான் பெரிய போராட்டங்களுக்கு தூண்டிவிடுவது,
மக்கள் பிரதிநிதிகளை வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் வருவாய் துறையினரிடம் புகார் கேட்கிறார்கள். அவர்கள் கொடுக்க மறுத்ததால் இடமாறுதல் என்று மிரட்டி வருகிறார்கள். மருத்துவமனையில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் இல்லை என்று போராடினால் வழக்கு.. 20 ந் தேதி ஆயிரம் மின் பணியாளர்கள் வருவார்கள் என்று உத்தரவாதம் கொடுத்தார்கள் இன்னும் வரல. அதனால அதை கண்டித்தும் நிவாரணம் கேட்டு போராடும் மக்கள் மீதும் காவல்துறை வழக்குகள் போடுவதை கண்டித்தும் நாளை சனிக்கிழமை ஆலங்குடியில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.
-nakkheeran.in