மீண்டும் பரபரப்பு… சபரிமலைக்கு சென்ற சென்னையை சேர்ந்த 11 இளம்பெண்கள் தடுத்து நிறுத்தம்

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு சென்ற சென்னையைச் சேர்ந்த 11 இளம்பெண்களை கேரள போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கேரளாவில் வெடித்தது போராட்டம். தொடர்ந்து, பல்வேறு வடிவங்களில் போராட்டம் உருவெடுத்து வருகிறது.

சபரிமலையை அயோத்தியைப் போல் ஆவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதனால், மோதல் முற்றியது. மேலும், சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தவிடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் முடக்கினர்.

பக்தர்கள் கூட்டம் குறைவு

சபரிமலை கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறந்த கடந்த மாதம் 16-ந்தேதி முதல் போலீசாரின் கெடுபிடியால் பக்தர்களின் கூட்டம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சன்னிதானம், நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவை 5 வது முறையாக நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பலத்த சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனைவரும் சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருநங்கைகள் தரிசனம்

இதற்கிடையே, கடந்த வாரம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோயில் தந்திரிகள் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தாரிடம் போலீசார் நடத்திய ஆலோசனைக்கு பிறகு கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சு ஆகிய 4 திருநங்கைகள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் பாதுகாப்பு

பெண்கள் உரிமை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இளம்பெண்களுடன் ஒரு குழுவாக (ஞாயிற்றுக் கிழமை) 23-ம் தேதி சபரிமலைக்கு தரிசனம் செய்ய வர உள்ளதாக சென்னையைச் சேர்ந்த மனிதி என்ற பெண்கள் அமைப்பு கடிதம் எழுதி இருந்தது. அதற்கு, பாதுகாப்பு அளிப்பது குறித்து போலீசார் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயனிடம் இருந்து தகவல் வந்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

இளம்பெண்கள் வருகை

5 நாட்கள் கடும் விரதம் இருந்து சென்னையைச் சேர்ந்த 11 இளம்பெண்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து வந்தனர். அவர்களை கோட்டயம் ரயில் நிலையத்திலேயே கேரளா போலீசார் தடுத்து நிறுத்தனர். ஏற்கனவே பெண்கள் சபரிமலைக்குள் நுழைய முயன்ற போது பெரும் கலவரம் வெடித்தது. இந்தநிலையில், சென்னையைச் சேர்ந்த பெண்கள் அமைப்பினர் வந்திருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 15 பெண்கள் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: