தூத்துக்குடி: தமிழகத்தின் தற்போதைய பிரதான பிரச்னைகளில் தீராத … தீவிரமான விவாதங்களையும் எழுப்பியுள்ள விவகாரங்கள் என்ற பட்டியலில் தற்போது மீண்டும் இடம்பிடித்துள்ளது தூத்துக்குடியும்… ஸ்டெர்லைட் ஆலையும்.
2018ம் ஆண்டு மே 22ம் தேதி… தமிழகம் அவ்வளவு எளிதாக மறக்கமுடியாத கருப்பு நாள் என்று வர்ணிக்கக்கூடிய அளவுக்கு நிகழ்ந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்… அன்றைக்கு எழுந்த மக்களின் உச்சக்கட்ட எதிர்ப்பு என்ற கொதி நிலையானது தற்போது சில நாட்களாக மீண்டும் உருவாகி வருகிறது.
ஒட்டு மொத்த தமிழ்நாடே வெகுண்டெழுந்து… கொதித்த.. இந்த பிரச்சனையானது ஏதோ… கடந்த மே 22ம் தேதிக்கு முன்னர் தான் மையப்படுத்தப்பட்ட பிரச்னை அல்ல.. ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிர்ப்பு என்பது பல ஆண்டு காலமாக எழுந்து வருகிறது.
உச்ச நீதிமன்றம் தடை
2009ம் ஆண்டே எதிர்ப்பாளர்களின் நிர்பந்தத்தால், ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று தமிழ் நாடு அரசு உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த ஆணையை உடனே தடை செய்து ஆலையை இயங்க அனுமதி அளித்தது. 2013ம் ஆண்டு சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவித்ததாக கூறி, ரூபாய் 100 கோடி அபராதம் கட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஆலை இயங்க தடை விதிக்கப்படவில்லை.
அரசின் முடிவு தவறு
அதன் பின்னர் 2013ம் ஆண்டு தமிழ் நாடு அரசு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்று மீண்டும் ஆணையிட்டது. ஆனால், National Green Tribunal எனப்படும் தேசிய பசுமை தீர்ப்பாயம் பிரச்சினைகளை ஆராய்ந்த பின்னர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ் நாடு அரசின் முடிவு தவறு என்று கூறி ஆலையை இயங்க அனுமதி அளித்தது.
மக்கள் பேரணி – 13 பேர் பலி
ஆனால் அதன்பிறகும் தொடர்ச்சியாக எழுந்து வந்த எதிர்ப்பு அலை… வெகுண்டெழுந்து ஒரு கட்டத்தில் போராட்டத்தின் 100வது நாளான மே 22ம் தேதி பேரணி, ஆர்ப்பாட்டங்கள், முழக்கங்கள் என தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் உச்ச கட்டமாக அந்த பேரணியில் வன்முறை, கலவரம், துப்பாக்கிச் சூடு என்று அரங்கேற 13 பேர் கொல்லப்பட்டதோடு முடிந்தது. ஒட்டு மொத்த தமிழ்நாடே உறைந்து போக.. அனைத்து அரசியல் கட்சிகள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்களின் பயணமும் தூத்துக்குடி நோக்கி சென்றது.
ஆறுதல் கூறிய அரசியல்வாதிகள்
பெரிய கட்சிகள் என்றில்லாமல், அறிமுகம் இல்லாத, பரிச்சயமில்லாத பெயர்களை தாங்கிய துண்டு, துக்கடா கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டு கண்டன அறிக்கைகளை வெளியிட, தமிழக அரசின் மீதும், காவல்துறையின் மீதும் அனைத்து தரப்பும் புழுதி வாரி தூற்றின. சொந்த மக்களை பாதுகாக்க வேண்டிய அரசானது, உயிர்களை காவு வாங்கியதாக ஓலமிட்டன.
நான்தான் ரஜினிகாந்த்..
திரண்டு வந்த அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக தமிழக அரசை கண்டித்து ராகம் பாடின. பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து கண்ணீர் விட்ட அரசியல்வாதிகள்… ஆறுதல் கூறி பின்னர் பேட்டி அளித்தும் சென்றனர்.(அவர்களில் நீங்க யாரு..?? உங்க பேரு என்ன… எங்கிருந்து வர்றீங்க… என்று நடிகர் ரஜினியை பார்த்து இளைஞர் ஒருவர் கேட்டதும்.. ரஜினியின் ரியாக்ஷனும் தனிக்கதை)
மக்களின் கவனம்
ஆலையினால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசின் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட நீதிமன்றங்களில் வழக்குகள் பாய்ந்தன. ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோரின் கண்டனங்கள், நடுநாயகமான மக்களின் வசவு சொற்கள் வீரியமடைய ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று அறிவித்தது. அதற்கான உத்தரவை தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் பிறப்பிக்க ஆலை மூடப்பட்டது. உலக நீதிமன்றமே சென்றாலும் இந்த உத்தரவை யாராலும் அகற்ற முடியாது.. ஒன்றும் செய்ய முடியாது மார்தட்ட… மக்களின் கவனமும் வேறு பக்கம் திரும்பியது.
மோசமான நிலை என கருத்து
இந்த அரசாணைக்குப் பதிலாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதை அரசின் கொள்கை முடிவாக அறிவித்திருக்க வேண்டும் என்பதை அப்போதே எதிர்க்கட்சிகளும் சட்ட நிபுணர்களும் தெரிவித்திருந்தனர். தடை நிலைக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். தொடர்ந்து, பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வாதாடிய போதும் அதில் தமிழக அரசு தரப்பு முழு செயல் திறனுடன் செயல்பட்டது போல தெரியவில்லை என்றும் இது மோசமான திசை நோக்கிச் செல்வதால் தமிழக அரசு இப்போதாவது சுதாரிக்க வேண்டும் என்றும் கருத்துகள் பதிவிடப்பட்டன.
தீர்ப்பு விவரங்கள்
அதையும் தமிழக அரசு புறம்தள்ள தற்போது ஆலையை ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் வழக்கை அடுத்து, தற்போது ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் தீர்ப்பு விவரங்கள் கடந்த 15ம் தேதி மதியம் வெளியானது. ஆனால், அதற்கு 6 மணி நேரம் முன்னதாகவே, அன்றைய தினம் சரியாக காலை 7.39 மணிக்கு வேதாந்தா குழுமத்தின் மூலமாக தீர்ப்பு நகல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
சொன்ன எதிர்க்கட்சிகள்
ஆலை திறக்கப்பட உள்ளது, அதற்கு அரசு ஆதரவாக உள்ளது என்ற கருத்துகள் பரவ… அன்றே சொன்னோம் என்று எதிர்க்கட்சிகள் பேப்பரையும், பேனாவையும் எடுத்து அறிக்கைக்கு வாசகங்களை தேட.. தூத்துக்குடி மக்கள் செய்வதறியாத நிலையில் உள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசும் ஆணித்தரமாக ஆலை மூடப்பட்டது.. மூடப் பட்டதுதான் (உள்ளது… உள்ளபடியே என்பது போல) என்று தெரிவித்தாலும் அன்றே கொள்கை முடிவாக எடுத்து அறிவித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜன. 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆனால் தீர்ப்பின் நகல், அது வெளியான தன்மை ஆகிய அம்சங்களை முன் வைத்து தூத்துக்குடி பேராசிரியர் பாத்திமா மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசின் நிலைப்பாடு என்ன?? என்று கேள்வி கேட்ட நீதிபதிகள், அதனை வரும் ஜனவரி 21ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி, வழக்கின் விசாரணையை அதே ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளனர். ஒரு வழக்கில் வெளியாகும் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 90 நாட்கள் அவகாசம் என்பது அனைத்து தரப்பினருக்கும் நமது சட்டம் வழங்கும் சமமான வாய்ப்பாகும். அந்த வாய்ப்பை தமிழக அரசு எப்போது பயன்படுத்தும் என்று தெரியாத நிலைதான் தற்போது உள்ளது.