புதுடில்லி, பாக்.,கை ஒட்டிய எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வேலிகளை வெட்டி, பயங்கரவாதிகள் ஊடுருவுவதாகவும், அவற்றை விரைவில் சரி செய்ய வேண்டும் என்றும், எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.இந்தியா – பாக்., இடையிலான, 4,063 கி.மீ., நீளமுள்ள எல்லைப் பகுதி, ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களை ஒட்டி உள்ளது.எல்லைப் பகுதிகளில் தேவையான கட்டுமானங்களை, மத்திய பொதுப் பணி துறை மேற்கொள்கிறது.கடந்த மாதம், டில்லியில், எல்லைப் பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், பி.எஸ்.எப்., மற்றும் சி.பி.டபிள்யூ.டி.,யின் மூத்த அதிகாரிகள் பங்கேற்று, நிலுவை பணிகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நிலுவை பணிகள் குறித்த அறிக்கையை, மத்திய பொது பணி துறையிடம், பி.எஸ்.எப்., அதிகாரிகள் சமீபத்தில் அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது:குஜராத் மாநிலத்தில், சர்வதேச எல்லைப் பகுதியில், புஜ் மற்றும் காந்திநகர் பிரிவில் உள்ள, 2,061 எல்லை வேலி மின் கம்பங்களில், 616 மின் கம்பங்கள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன. அதே போல், 82 டீசல் ஜெனரேட்டர்களில், 38 மட்டும் இயங்குகின்றன.எல்லையில் உள்ள வேலிகளை வெட்டி, பாக்., பயங்கரவாதிகள், அடிக்கடி ஊடுருவுகின்றனர்.அதனை தடுப்பதற்கு, வெட்டப்பட்ட வேலிகளை சீரமைக்க வேண்டும். பழுதான ஜெனரேட்டர்களை விரைவில் சரி செய்தால், எல்லை பாதுகாப்பு பணி தடையின்றி நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-dinamalar.com