விருதுநகர்: எச்ஐவி கிருமியுடன் இருந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (24). இவர் 2-வது முறையாக கர்ப்பமானார். அவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
சோர்வு
2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது. அந்த நாள் முதல் அவர் சோர்வாகவே காணப்பட்டார்.
எச்ஐவி உறுதி
இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அந்த கர்ப்பிணி மீண்டும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு நடைபெற்ற சோதனையிலும் எச்ஐவி உறுதி செய்யப்பட்டது.
வெளிநாடு
விசாரணையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சிவகாசியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்ல இருந்தார். விதிகளின் படி அந்த நபருக்கு அரசு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில், அவருக்கு ஹெச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
கைது
அந்த இளைஞரின் ரத்தத்தைதான் அந்த கர்ப்பிணிக்கு ஏற்றியது தெரியவந்தது. இதையடுத்து ரத்த வங்கியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் வளர்மதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.
விரைந்தார்
இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் விசாரணை நடத்துவதற்காக கமதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை ரத்த வங்கி தலைவர் சிந்தா தலைமையில் உயர் மட்ட குழு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விருதுநகர், சிவகாசி ரத்த வங்கிகளில் குழு ஆய்வு நடத்தும். இதனிடையே சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் விருதுநகர் விரைந்தார்.
நடவடிக்கை
அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் எச்.ஐ.வி. கிருமியுடன் இருந்த ரத்தத்தை கர்ப்பிணிக்கு செலுத்தியது மன்னிக்க முடியாத குற்றம். கர்ப்பிணிக்கு வெளிநாடுகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பணிநீக்கம்
கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள குழந்தைக்கு எச்ஐவி தொற்று போகாத வகையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு எடுக்கப்பட்ட ரத்தம் சோதிக்கப்படாமல் கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.