நரேந்திர மோதி அரசு பெருநிறுவனங்களின் நலனுக்காக உங்களை உளவு பார்க்கிறதா?

சமீபத்தில் மத்தியில் ஆளும் மோதி அரசு, இந்தியாவின் எந்த மூலைகளில் இருந்தும் செயற்படும் கம்ப்யூட்டர்களில் இருந்து வெளியேறும் மற்றும் அவற்றுக்கு உள்ளே வரும் எந்த தகவல்களையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும், குறிப்பிட்ட கம்ப்யூட்டர்களில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும் எந்த தகவல்களையும், தோண்டி எடுத்து, அப்படியே அள்ளிக் கொண்டு போகவும், பத்து அரசு அமைப்புகளுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இந்த பத்து அமைப்புகளில் மத்திய உளவுத்துறை (Intelligence Bureau or IB), சிபிஐ, வெளிநாட்டில் நடப்பற்றவை உளவு பார்த்தறியும் ‘ரா’ (Research and Anaylis Wing or RAW), வருமான வரித்துறை, உள்ளிட்டவை அடங்கும்.

இந்த அறிவிப்பு பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளை தவிர்த்த அனேகமாக அனைத்து எதிர்க் கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பெரும்பாலான தேசிய ஆங்கில மற்றும் பல மாநில மொழிகளின் முன்னணி ஊடகங்கள், தொலைக் காட்சிகள் மற்றும் பிரதான செய்தி இணையதளங்ள், சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் உள்ளிட்டோரிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை சந்தித்து கொண்டிருக்கிறது.

மோதி அரசின் இந்த சமீபத்திய உத்தரவை பார்ப்பதற்கு முன்பாக, நாடு விடுதலை அடைந்த கடந்த 70 ஆண்டு காலத்தில் இதற்கு முன்பு இப்படிப்பட்ட முயற்சிகள், அந்தந்த காலகட்டத்தில் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்களிடமிருந்து எப்படி வெளிப்பட்டது என்பதை நாம் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திரா காந்தி

இதற்கு முன்பு ஒரு முறை, இது போன்று, கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் காரியம் பரந்துபட்ட அளவில் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப் பட்டது. மற்றோர் முறை இந்த காரியம் முயற்சிக்கப் பட்டு, அது தோற்றுப் போய், குறிப்பிட்ட அரசால் அந்த நடவடிக்கை வாபஸ் வாங்கப்பட்டது.

முதலில் இது நிகழ்ந்தது 1975 ஜூன் முதல் 1977 மார்ச் மாதம் வரையில் பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப் படுத்தப் பட்ட அவசரநிலை காலத்தில்தான். கிட்டத் தட்ட 19 மாத காலம் அவசர நிலை அமலில் இருந்தது. இந்த 19 மாத காலத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வோர் இந்தியனுக்கும் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப் பட்டன.

இவ்வாறு அடிப்படை உரிமை பறிக்கப் பட்டது, அவசர நிலைக் காலத்தில், சரியான நடவடிக்கை என்றே உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 4:1 என்ற விகிதத்தில் தீர்ப்பளித்தது.

இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கை அரசியல் அமைப்பு சாசனத்தின்படி சரியென்றே 4 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆனால் ஐந்தாவது நீதிபதி எச்.ஆர். கண்ணா, ஒவ்வோர் இந்தியனின் அடிப்படை உரிமையை பறிப்பது இந்திய அரசியல் அமைப்பு சாசனத்துக்கு முற்றிலும் எதிரானது, இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் அடித்தளத்தையே தகர்த்து எறியும் செயல் என்று தைரியமாக தீர்ப்பளித்தார்.

அன்றைய காலகட்டத்தில் ஒற்றை மனிதராக, நீதிபதி எச்.ஆர். கண்ணா, நீதித் துறையின் வழி நின்று, சர்வாதிகாரத்தின் கோர தாண்டவத்தை எதிர்த்து போராடினார்.

அது எவ்வளவு மேன்மையான செயல் என்றால், 1976 ம் ஆண்டு இந்த விவகாரம் பற்றி தலையங்கம் எழுதிய, உலகின் புகழ் பெற்ற நாளேடுகளில் ஒன்றான,அமெரிக்காவிலிருந்து வெளிவரும், ‘தி நியுயார்க் டைம்ஸ்’ இப்படி கூறியது, ”நாளைக்கு மீண்டும் இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்கினால், அதற்கு ஒரே ஒரு மனிதர்தான் காரணமாக இருப்பார். அவர்தான் நீதிபதி எச்.ஆர். கண்ணா. இதற்கு நன்றிக் கடனாக இந்தியா, நீதிபதி எச்.ஆர். கண்ணாவுக்கு சிலை வைக்க வேண்டும்” என்று கூறியது தி நியூயார்க் டைம்ஸ்.

பின்னர் இந்த முயற்சியை, அதாவது, மக்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்கும் காரியத்தை, 1986ம் ஆண்டு பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கொள்ள முயற்சித்தார். ஆனால் அவரது தாயாரைப் போல ராஜீவ் காந்தியால் அதில் வெற்றி பெற முடியவில்லை. 1986ம் ஆண்டு ராஜீவ் காந்தியின் அரசு ‘தபால் மசோதா’ என்ற ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாவின் நோக்கம், இந்தியா முழுவதிலும், நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும், யாரிடமிருந்தும், யாருக்கும், எந்த தபால்கள் போனாலும், அதனை இடை மறித்து, பிரித்து பார்த்து பரிசோதிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு இந்த மசோதா அளித்தது.

ராஜீவ் காந்தி

நாட்டின் பாதுகாப்பை வலிமை படுத்த, மத்திய உளவு அமைப்புகளுக்கு இந்த அதிகாரம் தேவைப் படுகிறது என்று ராஜீவ் காந்தி அரசு வாதமிட்டது. இந்த மசோதா, மக்களவையில், வெறும் 20 எம்.பி.க்கள் மட்டுமே இருக்கும் போது தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றவும் பட்டது.

பின்னர் மாநிலங்களவையும் இந்த மசோதாவை ஏற்றுக் கொண்டது. இறுதியாக இந்த மசோதா சட்டமாக்கப் படுவதற்காக அப்போதய குடியரசு தலைவர் கியானி ஜெயில் சிங் கிற்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இங்குதான் பிரச்சனை எழுந்தது. இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஜெயில் சிங் மறுத்து விட்டார். ”இது போன்ற சட்டத்தை கொண்டு வருவதற்கான அவசியம் இப்போது ஏன் வந்தது? இது இந்திய அரசியல் அமைப்பு சாசானம் ஒவ்வோர் இந்தியனுக்கும் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது. உச்ச நீதி மன்றம் பல வழக்குகளில் அரசியல் அமைப்பு சாசனம், ஒவ்வோர் குடிமகனுக்கும் ஷரத்து 19 வது பிரிவின் கீழ் தந்திருக்கும் தனி மனித அடிப்படை உரிமைகளுக்கு மிகவும் தாராளமாக விளக்கம் கொடுத்திருக்கிறது (Suprme Court had already under several judgments gave liberal interpretation to Article 19, of Indian Constitution).

மேலும் இந்த ‘தபால் மசோதா’ வின் நோக்கங்களில் எந்த தபாலையும் பிரித்து பார்க்கும் அதிகாரம் எனும்போது, எந்த மாதிரியான தபால்கள் என்று துல்லியமாக எதுவும் வரையறுக்கப் படவில்லை.

உதாரணத்திற்கு இவ்வாறு இடைமறித்து தபால்களை பிரித்து பார்க்கும் அதிகாரம் எனும் போது அதில் தபால்துறை மூலம் அனுப்பப்படும் புத்தகங்கள், சஞ்ஜிகைகள், அதாவது தினசரி பத்திரிகைகள், வாராந்திர மற்றும் மாதாந்திர பத்திரிகைகள் போன்றவையும் இடம் பெறுகிறதா என்று தெளிவாக மசோதாவில் குறிப்பிடப்படவில்லை.

இந்த குழப்பமான நிலை, தபால்கள் மூலம் அனுப்பப்படும் பணம் அதாவது மணியார்டர்களையும் கூட பாதிக்கும்” என கியானி ஜெயில் சிங், ராஜீவ் காந்தி அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டார். பின்னர் இந்த மசோதாவை ராஜீவ் காந்தி அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது.

இதனை இப்போது சொல்லுவதற்கு காரணம், தற்போது மோதி அரசு போட்டிருக்கும், கம்ப்யூட்டர்கள் மற்றும் மின்னஞ்சல்களை (E mails) இடைமறிக்கும் இந்த உத்திரவு காலங் காலமாய் இந்தியாவில் ஆட்சியாளர்களால், அது எந்த ஆட்சியாக இருந்தாலும் செய்யப் பட்ட அல்லது செய்ய முயற்சிக்கப் பட்ட காரியம்தான் என்பதை சுட்டிக் காட்டத்தான்.

தொழில் நுட்ப வளர்ச்சி வளர, வளர, அந்தந்த தொழில்நுட்பத்தினால் மனிதர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் நடத்தும் கருத்து பரிமாற்றங்களுக்கு பயன்படுத்தும் கருவிகளை ஒட்டுக் கேட்கும் காரியம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

கணினி

மோதி அரசின் இந்த உத்தரவை விவாதிப்பதற்கு முன்பு, மற்றோர் செயலையும் இங்கே சுட்டிக் காட்டுவது மிகவும் பொறுத்தமாக இருக்கும் என்றே நம்புகிறேன். அதுதான் தொலைபேசி ஒட்டுக் கேட்பு. நாம் அனைவரும் நன்கு அறிந்த விஷயம்தான் தொலைபேசி ஒட்டுக் கேட்பு. தொலைபேசி ஒட்டுக் கேட்பால், கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

உதாரணத்திற்கு சொன்னால் 1980களில், அப்போதய கர்நாடக முதலமைச்சராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே தொலைபேசி ஒட்டுக் கேட்பால் தன்னுடைய ஆட்சியை இழந்தார். இந்த புண்ணிய காரியத்தை செய்தது, தற்போதய பாஜக ராஜ்ய சபா எம்.பியான சுப்பிரமணியன் சுவாமி. ராகிருஷ்ண ஹெக்டே அரசு எதிர்க்கட்சிகள் மற்றும் முக்கிய பத்திரிகையாளர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கிறது என்பதை ஆதாரத்துடன் சுப்பிரமணியன் சுவாமி நிருபித்ததால் ஹெக்டே பதவி விலகினார். அவரது அரசியல் வாழ்வும் அஸ்தமித்துப் போனது.

இதே போல் 2010ல் 2ஜி ஊழல் வழக்கில் நீரா ராடியா டேப்புகளில் வந்த உரையாடல்கள் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாட்டின் முன்னணி கார்ப்போரேட்டுகளின் முக மூடியை கிழித்து எறிந்தது.

இதில் பலர் சிறைக்கும் போனார்கள். 2ஜி வழங்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் சிபிஐ கீழமை சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும், சிபிஐ நடத்தும் இந்த வழக்கின் மேல் முறையீடு தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை இங்கு சுட்டிக் காட்டுவது அவசியம் என்றே கருதுகிறேன்.

ஆ ராசா

சமீபத்திய உதாரணம் 2011 ஜூன் மாதத்தில், அப்போதய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தன்னுடைய அலுவலகத்தில் ஒட்டுக் கேட்பு கருவிகள் இருப்பதாக குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக 2010 செப்டம்பர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஆனால் மத்திய உளவுத்துறை பல மணி நேரம், நவின கருவிகளை வைத்து சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் தீவிர சோதனைகளை நடத்தி, பிரணாப் முகர்ஜி யின் அலுவலகங்களில் ஒட்டுக் கேட்பு கருவிகள் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தது. அதோடு இந்த விஷயம் அமுங்கிப் போனது.

பிரணாப் முகர்ஜியின் இந்த குற்றச்சாட்டுக்கு காரணம், அவருக்கும், அப்போது மத்திய அரசில் வலிமையுடன் இருந்த தென்னகத்தை சேர்ந்த மற்றோர் மூத்த அமைச்சருக்குமான பனிப் போரின் விளைவுதான் என்று காங்கிரஸ் மூத்த அமைச்சர்களே தனிப்பட்ட முறையில் பேசும் போது பத்திரிகையாளர்களிடம் வியாக்கியனங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர்.

தொலைபேசி ஒட்டுக் கேட்பு பற்றி 2010 ம் ஆண்டு, ”அவுட்லுக்” ஆங்கில வார இதழின் ஆசிரியர், மறைந்த வினோத் மேதா எழுதிய கட்டுரை சுவாரஸ்யமானது. ”ஏழு கோடி ரூபாய்க்கு இஸ்ரேல் நாட்டிலிருந்து ஒரு வேனை இந்தியா வாங்கியிருக்கிறது. இந்த வாகனத்தில் அதி நவீன ஒட்டுக் கேட்பு கருவிகள் உள்ளன. ”

”இந்த வேனை ஒரு தெரு முனையில் நிறுத்தி விட்டால், அதனை சுற்றியிருக்கும், இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான மொபைல் மற்றும், லேண்ட்லைன் தொலைபேசிகளில், நமக்கு தேவைப்படும் சுமார் 100 தொலைபேசிகளை தேர்ந்தெடுத்து அதில் அரங்கேறும் உரையாடல்களை நாம் கேட்க முடியும்” என்று கூறியிருந்தார். இது 2010 ம் ஆண்டு கதை. ”தற்போது இதற்கு வேன்கள் எல்லாம் தேவையில்லை. இந்த உபகரணம் தற்போது ஒரு சூட்கேஸ் அளவில் வந்து விட்டது” என்று என்னிடம் பேசும் ஒரு ஓய்வு பெற்ற மத்திய உளவுத்துறை அதிகாரி கூறினார்.

இதில் மற்றுமோர் சுவாரஸ்யமான விஷயமாக அந்த ஓய்வு பெற்ற அதிகாரி சொன்னது இதுதான்; ”முன்பெல்லாம் நாங்கள் (அரசு) மட்டும்தான் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தோம். இப்போது தனியாரும் இதனை செய்யலாம். ஆம். ஒட்டுக் கேட்பு கருவிகள் சர்வசாதரணமாக, இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியேயும், கிடைக்கின்றன.

வெறும் 2 லட்சம் ரூபாய் செலவு செய்தால் கூட ஒருவரால் ஒட்டுக் கேட்பு சாதனங்களை வாங்கி விட முடியும் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். இன்று அரசுகள் மட்டுமல்ல, சில வலுவான அரசியல் எதிர்க்கட்சிகளும் இந்த காரியத்தை செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் நிரூபிப்பது கடினமானது,” என்கிறார் அவர்.

இந்த நீண்ட ராமாயணத்தை சொல்லுவதற்கு காரணம், இந்த பின்புலத்தில் பார்த்தால், தற்போதய மோதி அரசின் உத்திரவு சரயான பார்வையில் நமக்கு புரியும் என்பதற்குத்தான்.

நரேந்திர மோதி

மோதி அரசின் உத்தரவு கடுமையான விமர்சனத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதில் முக்கியமானது, இந்த கம்ப்யூட்டர்கள் கண்காணிப்பு ஏன் தற்போது தேவைப்படுகிறது என்பதுதான். நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்தான் இதற்கு முழு காரணம் என்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி.

மேலும் இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உருவான திட்டம்தான் என்கிறார் அவர். ஆனால் எதிர்கட்சிகளோ இது இந்தியாவை ஒரு போலீஸ் நாடாக (A Police State) மாற்றும் முயற்சி என்று குற்றஞ் சாட்டுகின்றன. ”ஒவ்வோர் இந்தியனையும் ஒரு கிரிமினலாக மோடி அரசு பார்க்கிறது. அதனது விளைவுதான் இந்த உத்தரவு” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி.

கம்ப்யூட்டர்களை கண்காணிப்பது மற்றும் இடைமறித்து தகவல்களை திருடுவது என்பது இரண்டு காரியங்களுக்காக நடக்கிறது. முதலாவது, அரசியல் காரணங்களுக்காக.

அதாவது அரசுக்கு எதிராக செயற்படும், ஜனநாயக பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கும், வாக்கு வங்கி அரசியிலில் ஈடுபட்டு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், இந்தியா முழுவதும் இருக்கும் எதிர்கட்சி எம்.பி க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் கம்ப்யூட்டர் செயற்பாடுகளில் ஊடுருவி தகவல்களை அறிந்து கொள்வது. மேலும், மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக இயங்கும், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருப்பது.

உளவு

இரண்டாவது, மத்திய அரசின் கடைக்கண் பார்வையிலேயே எப்போதும் இருந்து கொண்டிருக்கும் சில குறிப்பிட்ட கார்ப்போரேட் நிறுவனங்களின் நலன்களுக்கான செயல்தான் இது. அதாவது இன்றைய உலகில் நடக்கும் மிகப் பெரிய போட்டி, நாடுகளுக்கு இடையிலும், கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு இடையிலும், நாடுகளுக்கும் இடையிலும் – கார்ப்போரேட்டுகளுக்கும் இடையிலும் நடக்கும் மிக முக்கிய போட்டி அல்ல, யுத்தம், ஒரு மனிதனை பற்றிய அனைத்து தரவுகளையும், (DATA) யார் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது (to control) என்பதுதான். இது ‘அமெரிக்க மாதிரி முதலாளித்துவம்’ (American model Captitalism).

‘ஐரோப்பிய மாதிரி முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியில்’ இருக்கும் சில ‘மனிதாபிமான கூறுகள்’, ‘அமெரிக்க மாதிரி முதலாளித்துவத்தில்’ கிடையாது. நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் திரும்ப, திரும்ப, கடந்த பற்பல ஆண்டுகளாக அமெரிக்காவில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதைத்தான் தற்போதய இந்தியாவில் மோதி அரசு ஆர்வத்துடன் குறிப்பாக தேர்தல்கள் மிக அருகாமையில் நெருங்கி வந்து கொண்டிருக்கும் வேளையில் செய்யத் துவங்கியிருக்கிறது.

இன்றைய சூழலில் மோதி அரசை பொறுத்த வரையில் இது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து வீழ்த்தும் காரியமாகும். ஒன்று எதிர்கட்சிகளை வீழ்த்துவது, இரண்டாவது ஆளும் கட்சிக்கு ஆதரவான குறிப்பிட்ட மிகப் பெரிய கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு DATAவை வாரி வழங்குவது.

கணினி

இது அடிப்படையில் வெறும் ‘நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வேவு பார்த்தலோ, எதிர்கட்சிகளை முடக்கும் அரசியல் வேவு பார்த்தலோ (Neither surveillance to strengthen the country’s security nor political surveillance to neutralize the opposition) மட்டும் கிடையாது. இந்த இரண்டையும் தாண்டிய குறிப்பிட்ட சில கார்ப்போரேட்டுகளின் லாபத்தை பல்லாயிரம் மடங்கு அதிகரிக்கும் நோக்கங் கொண்ட ‘பொருளாதார வேவு பார்த்தல்’ (An economic surveillance).

அந்த கோணத்தில் பார்த்தால், மோடி அரசின் சமீபத்திய இந்த உத்தரவை கார்ப்பரேட்டுகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் இடையிலான பண பரிமாற்றத்தால் உருவாகும் ‘முதலாளித்துவ பொருளாதாரத்தின் உச்ச கட்டம்’ (Height of Crony Capitalism) என்றே நான் எண்ணுகிறேன்.

இதில் இன்னோர் அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக கம்ப்யூட்டர்களை வேவு பார்ப்பது ஏற்கனவே சத்தமில்லாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது யார் ஆட்சியில் இருந்தாலும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

ஆனால் தற்போது, அதுவும் தேர்தல்கள் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் இதனை வெளிப்படையாக அறிவித்து விட்டு செய்வது என்பது ஒன்று அரசை விமர்சிப்பவர்களை அச்சுறுத்துவதற்கும், இரண்டாவது குறிப்பிட்ட சில கார்போரேட்டுகளிடம், அவர்களது நலன்களை தாங்கள் பாதுகாக்கிறோம் என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்கும்தான். எப்படி பார்த்தாலும் இது அடிப்படையில் அப்பட்டமான தனி மனித உரிமை மீறல், ஜனநாயக உரிமை மறுப்பு என்றே நான் கருதுகிறேன்.

உலகின் பல நாடுகளில் கம்ப்யூட்டர்களை கண்காணிப்பது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மனித உரிமைகளை மதிக்கும், ஜனநாயகம் பக்குவம் அடைந்த நாடுகளில் இந்த காரியம், நீதிமன்றங்களின் மேற்பார்வையிலும், நீதிமன்றங்களின் அனுமதி பெற்றும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் அது போன்று நீதிமன்றங்களின் மேற்பார்வையில் கம்ப்யூட்டர்களை வேவு பார்க்கும் காரியங்கள் நடந்தால், அதில் எதிர்ப்பு தெரிவிக்க முகாந்திரங்கள் மிக குறைவு.

ஆனால் அரசு தன்னிச்சையாக இதில் செயற்படுவதுதான் எதிர்கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதான எதிர்ப்பின் காரணமாக இருக்கிறது. ஏனெனில் தேச பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் இருந்து நாட்டை காப்பாற்ற இந்த காரியங்கள் தேவை என்று மத்திய அரசு எவ்வளவு வாதிட்டாலும், இது அதனையும் தாண்டி, பல நேரங்களில் எதிர்க்கட்சிகளையும், அந்தந்த காலகட்டங்களில் நாட்டை ஆண்ட கட்சிகள், தங்களது எதிர்கட்சிகளை பழி வாங்கவும் தான் ஒட்டுக் கேட்பை பயன்படுத்தியிருக்கின்றன என்பதே வரலாறாக இருந்து கொண்டிருக்கிறது.

facebook

தற்பொழுதய தொழில் நுட்ப வளர்ச்சி கம்ப்யூட்டர்கள் இல்லாமல் ஓரணுவும் அசையாது என்ற நிலையை உருவாக்கி விட்டது. கம்ப்யூட்டர் வேவு பார்ப்பதில் வந்து இன்று இந்த விவகாரம் நின்று கொண்டிருக்கிறது. ஆகவே குறைந்தபட்ச அளவேனும் மனித உரிமைகளை மதிப்பவர்கள் அனைவரும் மோதி அரசின் தற்போதய உத்தரவை எதிர்ப்பது என்பது தவிர்க்க முடியாததாகவே மாறியிருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன் கம்ப்யூட்டர்களை வேவு பார்ப்பது என்பது ஏதோ மோதி அரசு மட்டுமே முதன்முறையாக சுதந்திர இந்தியாவில் செய்கிறது என்று நான் சொல்லவில்லை. காங்கிரஸ் ஆண்ட காலங்களிலும் இதே தான் நடந்தது. ஆனால் அப்போது இவ்வளவு பொருளாதார வளர்ச்சியும் இல்லை, மோதி அரசை போல காங்கிரஸ் அரசுகள் வரம்பு கடந்து இத்தகையை வேவு பார்க்கும் காரியங்களை செய்யவும் இல்லை. அந்த ஒரு மிகப் பெரிய வித்தியாசத்தை நாம் மறந்து விட வேண்டாம்.

நாட்டின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அந்தவளவுக்கு முக்கியமானதுதான் தனி மனித சுதந்திரமும். இந்திய அரசியலமைப்பு சாசனம் ஒவ்வோர் இந்தியனுக்கும் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமைகளுக்கும், பேச்சுரிமைக்கும், எழுத்துரிமைக்கும் உத்திரவாதம் தர வேண்டியது இந்தியாவின் மத்திய, மாநில அரசுகள்தான். ஆகவே இந்த இரண்டையும் சமமாக கொண்டு செல்லுவது (Balancing the national security and the fundamental rights given to each and every citizen by the Constitution of India) என்பது எந்தவோர் அரசுக்கும் சவாலான ஒன்றுதான்.

இந்த சவாலை சம்மந்தப்பட்ட அரசுகள் எப்படி திறம்பட சமாளிக்கின்றன என்பதை பொறுத்தே இருக்கிறது இந்தியா ஒரு பக்குவமடைந்த ஜனநாயக நாடா அல்லது அடிப்படை மனித உரிமைகளை காலின் கீழ் போட்டு மிதிக்கும், ஒரு நாடா என்ற கேள்விக்கான பதில்.

(இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளரின் கருத்துகளே. பிபிசியின் கருத்து அல்ல -ஆசிரியர் )

-BBC_Tamil

TAGS: