சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றியதால் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளான கர்ப்பிணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று மீண்டும் ரத்த பரிசோதனை செய்து நோய்தொற்று உறுதிபடுத்தப்பட்டது. அவருக்கு தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ‘டீன்’ சண்முகசுந்தரம் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு, சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்டதால், அந்த கர்ப்பிணி எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகி இருப்பது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த கர்ப்பிணி தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் சண்முகசுந்தரம். “பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, ஆஸ்பத்திரியின் முதல் மாடியில் உள்ள தனி அறையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. மகப்பேறு மருத்துவத்துறை தலைவர் டாக்டர் சாந்தி, டாக்டர்கள் நடராஜன், ரஞ்சித் ஆகியோர் தலைமையில் 9 டாக்டர்கள் கொண்ட குழுவினர் அவரை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பிரசவத்துக்கு பின்னர்தான், அவரது குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து உறுதியாக கூற முடியும். ஆனால் குழந்தைக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்படாத வகையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே எச்.ஐ.வி. தொற்றிருந்த சில கர்ப்பிணிகளுக்கு, சரியான முறையில் சிகிச்சை அளித்து, அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. பாதிக்காத வகையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த கர்ப்பிணிக்கு பிறக்கும் குழந்தைக்கும் நூற்றுக்கு 99 சதவீதம் எச்.ஐ.வி. தொற்று வர வாய்ப்பு இருக்காத வகையில் மிகவும் கவனத்துடன் சிகிச்சை அளித்து வருகிறோம்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் செய்த ரத்த பரிசோதனையிலும் எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எச்.ஐ.வி. மற்றும் மஞ்சள்காமாலை நோய் ஆகியவை பிரசவத்தின் போதுதான் குழந்தையை பாதிக்கும். எனவே அந்த நோய் குழந்தையை பாதிக்காத வகையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க உள்ளோம்.
குழந்தை பிறந்தவுடன் மஞ்சள் காமாலை நோய் தாக்காத வண்ணம் அதற்குரிய தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள உள்ளோம். கடந்த 8 நாட்களுக்கு முன்பு அந்த கர்ப்பிணிக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தொடர் சிகிச்சையினால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.
சாதாரண மனிதர்களுக்கு உள்ள எதிர்ப்பு சக்தியின் அளவை போன்று, அந்த கர்ப்பிணிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எச்.ஐ.வி. தொற்றுக்கான சிகிச்சை முறைகளை தொடங்கி விட்டோம். அவர் இனி தொடர்ந்து அந்த சிகிச்சையை பெற வேண்டும்.” என்று கூறியதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
மேலும், தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கிற்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது என்கிறது அந்நாளிதழின் மற்றொரு செய்தி.
“சென்னை ஐகோர்ட்டில் கிறிஸ்துமஸ் விடுமுறை கால கோர்ட்டு நேற்று செயல்பட்டது.
நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.
அப்போது வக்கீல்கள் சிலர் ஆஜராகி, ‘அரசு டாக்டர்கள், ஊழியர்களின் அலட்சியமாக செயல்பட்டதால், சாத்தூரை சேர்ந்த இளம் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்யவேண்டும். இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்கிறோம். இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை வருகிற ஜனவரி 3-ந்தேதி தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும்’ என்ற உத்தரவிட்டனர்.
அப்போது கோர்ட்டில் இருந்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், இந்த சம்பவம் குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்வதாக கூறினார்.” என்றூ அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது. -BBC_Tamil