டெல்லி: தமிழகத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய வேளாண்துறை 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
கஜா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மிகப்பெரிய சேதத்தை சந்தித்தன. தென்னை, வாழை, பலா, முந்திரி மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன.
புயல் நிவாரணமாக, மத்திய அரசு 15,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
கஜா புயல் பாதிப்பு தொடர்பாக, தமிழக அரசு அளித்த அறிக்கையின் அடிப்படையில், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.353.70 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.
இந்த நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சகம், தமிழகத்திற்கு 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. நெல்லுக்கு ரூ.93 கோடி, தோட்டப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு இது எள் முனை அளவு கூட போதாது என்று விவசாயிகள் குமுறுகிறார்கள்