பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018 வரை வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ளதற்காக ரூ.2,021 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தான் கவனம் செலுத்துவதாகவும், இந்திய மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த பிரச்சினை நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டன.
இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங், மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.2,021 கோடி செலவாகி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதமராக மோடி பதவி ஏற்ற கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018 வரை 10 முக்கிய நாடுகள் உள்பட 55 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருப்பதாகவும், இதற்கான விமான பயண செலவு, விமான பராமரிப்பு கட்டணம் மற்றும் பிரதமருக்கான சிறப்பு ஏற்பாடுகளுக்காக இதுவரை ரூ.2,021 கோடி செலவாகி உள்ளது. வெளிநாட்டு பயணம் மூலம் இந்தியாவுக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு 1 லட்சத்து 36 ஆயிரத்து 77.75 மில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது’ என்று தெரிவித்தார்.
-athirvu.in