விஸ்வரூபம் எடுக்கும் எச்ஐவி ரத்த ஏற்றம்….சென்னை, சாத்தூரை அடுத்து மேட்டூர் பெண் புகார்

விருதுநகர்: மேட்டூரை சேரந்த பெண்ணுக்கு ரத்த பரிமாற்றத்தால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

ரத்ததானம் செய்த நபருக்கு எச்ஐவி தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

2014-ஆம் ஆண்டு தானமாக பெறப்பட்ட ரத்தத்தை செலுத்தியதில் எச்ஐவி பாதிப்பு என மேட்டூர் பெண் புகார் அளித்திருந்தார். சாத்தூர் கர்ப்பிணி பெண் அளித்த புகாரை தொடர்ந்து சென்னை, மேட்டூர் பெண்கள் தொடர்ந்து புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்ப்பிணிக்கு ரத்தம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியின் 24 வயதுடைய மனைவி 2-வது முறையாக கர்ப்பமானார். அவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கர்ப்பிணியை சோதனை செய்தபோது அவருக்கு ரத்தசோகை இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு ரத்தம் ஏற்றவேண்டும் என்று அறிவுறுத்தினர். 2 வாரங்களுக்கு முன்பு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டு கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது.

போலீசில் புகார்

ரத்தம் ஏற்றிய நாளில் இருந்து அவர் சோர்வாகவே காணப்பட்ட நிலையில், அதை அவரது குடும்பத்தினரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிகிறது. மோசமடைந்த உடல்நிலை இந் நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசம் அடைய, இதையடுத்து அந்த பெண் அதே தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் உயிரிழப்பு

இந்நிலையில், கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்த தானம் அளித்த கமுதி பகுதியை சேர்ந்த இளைஞர் மனஉளச்சல் காரணமாக விஷம் அருந்திய நிலையில், சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவருக்கு தீவிர சிசைச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.

வழக்கு தொடர முடிவு

அறுவை சிகிச்சைக்கு வந்த சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியது தொடர்பாக வழக்கு தொடரப்போவதாக வக்கீல் அறிவித்துள்ளார். ரத்தம் உறையாமை நோயால் அவதிப்பட்ட மாணவிக்கு மதுரை புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை பெண் புகார்

4 மாத கர்ப்பிணியாக இருந்த போது சென்னை மாங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ரத்தம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செல்லும்படியும் ஆலோசனை வழங்கி இருக்கிறார்கள். அங்கு ஏற்றப்பட்ட 2 யூனிட் ரத்தத்தில் எச்ஐவி தொற்று இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த மாதம் குழந்தை பெற்ற அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேட்டூர் பெண் புகார்

மேட்டூரை சேரந்த பெண்ணுக்கு ரத்த பரிமாற்றத்தால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என சேலம் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி தெரிவித்துள்ளார். ரத்ததானம் செய்த நபருக்கு எச்ஐவி தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். 2014-ஆம் ஆண்டு தானமாக பெறப்பட்ட ரத்தத்தை செலுத்தியதில் எச்ஐவி பாதிப்பு என மேட்டூர் பெண் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

tamil.oneindia.com

TAGS: