மதுரை: எச்ஐவி பாதிப்பு ரத்தத்தை தானம் செய்ததால் மனமுடைந்த இளைஞர் விஷம் குடித்ததை அடுத்து அவருக்கு ரத்த வாந்தி ஏற்பட்டு 4 யூனிட் ரத்தம் ஏற்றியும் பலனளிக்கவில்லை என மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரச் சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி (24) 8 மாத கர்ப்பிணி. இவருக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் சிவகங்கை அரசு மருத்துவமனையிலிருந்து தானமாக பெறப்பட்டு சாத்தூரில் கடந்த 3-ஆம் தேதி கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டது.
இதனிடையே சிவகங்கை மருத்துவமனையில் ரத்தத்தை தானமாக கொடுத்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர். இவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல மதுரையில் ரத்தப் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஏற்றப்பட்ட ரத்தம்
இதையடுத்து சிவகங்கை மருத்துவமனைக்கு உடனடியாக போன் போட்டு தனக்கு எச்ஐவி இருப்பதால் தனது ரத்தத்தை யாருக்கும் தானமாக கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும் அதற்கு முன்பே கர்ப்பிணிக்கு ரத்தம் ஏற்றப்பட்டுவிட்டது.
எலி மருந்து குடித்த வாலிபர்
தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசின் அலட்சியம் குறித்து நேற்று கர்ப்பிணியும் கணவரும் கண்ணீர் மல்க பேட்டி கொடுத்தனர். இதை பார்த்தலிருந்து ரத்ததானம் செய்த இளைஞருக்கு மனவருத்தம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் எலிமருந்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
விசாரணை மேல் விசாரணை
இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரிடம் போலீஸார், மருத்துவர்கள், செய்தியாளர்கள் என விசாரித்த வண்ணம் இருந்தனர்.
கெஞ்சியும் கேட்கவில்லை
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நபர் திடீரென ” நான் வாழ விரும்பவில்லை, சாகப் போகிறேன்” என கூறிவிட்டு தனது உடலில் பொருத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை பிடுங்கி எறிந்தார். இதையடுத்து பெற்றோர் அவரிடம் கெஞ்சியும் அவர் கேட்கவில்லை.
மதுரை மருத்துவமனைக்கு மாற்றம்
இதையடுத்து மருத்துவர்கள் வந்து அவரை பிடித்து அவருக்கு உபகரமங்களை பொருத்தினர். அந்த இளைஞர் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி செய்வார் என்பதால் அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பலி
இந்நிலையில் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து மதுரை ராஜாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம் கூறுகையில் இளைஞர் உயிரிழந்ததற்கு காரணம் எலி விஷம்தான். இந்த விஷம் குடித்தால் நிச்சயம் உடலில் ரத்தக் கசிவு ஏற்படும்.
கல்லூரி முதல்வர் விளக்கம்
அதன்படி இளைஞருக்கு அதிகாலை 3.30 மணிக்கு ரத்த வாந்தி ஏற்பட்டது. பின்னர் 4 யூனிட் ரத்தம் ஏற்றினோம். எனினும் அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.10 மணிக்கு உயிரிழந்துவிட்டார் என்று கல்லூரி முதல்வர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.