காவிரி டெல்டாவுக்கு புத்துயிர் கொடுப்போம்.. புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக்குவோம்!

சென்னை: உலகமே புத்தாண்டை வரவேற்று கோலாகலமாக கொண்டாடிக் கொண்டுள்ளது. ஆனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டும் இன்னும் தங்களது சோகத்திலிருந்து மீளாமல் சுருண்டு போய்க் கிடக்கின்றன.

நாம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை சோற்றிலும் காவிரியின் பெயர் எழுதப்பட்டுள்ளது. அந்த வகையில் காவிரி டெல்டா மக்கள் சோகத்தில் விழுந்து கிடக்கும்போது கொண்டாட்டங்களை நம்மால் மனமுவந்து ஏற்க முடியவில்லை. அனுபவிக்க முடியவில்லை.

இருப்பினும் இந்த புத்தாண்டில் காவிரி டெல்டா மக்களின் ஒவ்வொரு துயரமும் பறந்து போக வேண்டும் என்று நாம் பிரார்த்திக்க முடியும். அதற்காக நம்மால் ஆன அத்தனை உதவிகளையும் நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்.

சின்ன சின்ன உதவிகள்

இன்னும் கூட பல உதவிகளை நாடி நிற்கிறது காவிரி டெல்டா. அரசுத் தரப்பிலிருந்து செய்யப்பட்ட நிவாரணங்கள் முழுமையாக போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம். எனவே மக்களும் இணைந்து காவிரி டெல்டா பகுதிகளின் நிவாரணத்தை கையில் எடுக்க வேண்டும்.

கட்டி எழுப்புவோம்

டெல்டா மக்களின் தேவைகளை தொடர்ந்து கண்காணித்து பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே ஒவ்வொருவரும் தங்களால் ஆன உதவிகளை தொடர வேண்டும். அப்போதுதான் பாதிப்பிலிருந்து அவர்கள் விரைந்து மீண்டு வர முடியும்.

தேவை தென்னை

பெருமளவில் டெல்டா மக்களுக்கு தென்னங்கன்றுளை வழங்க வேண்டியது அவசியம். நாம் தமிழர் கட்சி உள்ளிட்டோர் அதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மற்ற கட்சியினரும் இறங்க வேண்டும். அதேபோல பிற மாவட்ட மக்களும் தங்களது பிறந்த நாள் , கல்யாண நாள் இப்படி ஒவ்வொரு விசேஷத்தையும் இதுபோல தென்னங்கன்றுகள் கொடுத்தும், பிற உதவிகளைச் செய்தும் அதை இரட்டிப்பு பலனாக மாற்றலாம்.

தூக்கி விடுவோம்

நமக்கு சோறு போட்ட மக்கள். இன்னும் மீள முடியாமல் இருப்பது நமக்கெல்லாம் பெரும் அவமானம். எனவே இந்த புத்தாண்டில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம் என்பதை விட காவிரி டெல்டா மக்களையும் நாம் மகிழ வைத்து உண்மையான புத்தாண்டாக, மகிழ்ச்சிகரமான புத்தாண்டாக, புத்துயிர் கொடுத்த ஆண்டாக இதை மாற்ற முன்வர வேண்டும். நாமும் புத்தாண்டைக் கொண்டாடுவோம்.. காவிரி டெல்டாவையும் மீண்டும் களிப்புக்குள்ளாக்குவோம்.

tamil.oneindia.com

TAGS: