சென்னை: ஒரு வழியாக 2018 போயே போய்விட்டது.. ஏகப்பட்ட சோதனைகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் நம்மிடம் விட்டு விட்டு!!
ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்தின்போதும் அதை பூச்செண்டு கொடுத்து பூரித்து வரவேற்கிறோம் நண்பர்களை போல!! ஆனால் கொஞ்சமும் நன்றியே இல்லாமல் – கொஞ்சமும்கூட தயவு தாட்சண்யம் இல்லாமல் சில ஆண்டுகள் நடந்து கொள்கின்றன – சுனாமியால் தண்டித்த 2004 போல!!
வழக்கம்போல் 2018-யும் நாம் மகிழ்ச்சியோடு வரவேற்றோம். குதூகலத்தோடு கொண்டாடினோம். நம்பிக்கையுடன்தான் காத்திருந்தோம். ஆனால் முழுமையாக அது நம்மை ஏமாற்றிவிட்டது. மோசமான ஆண்டுகளில் ஒன்றாக மாறிவிட்டது.
மரண ஓலங்கள்
விவசாயிகள் தற்கொலை, ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு, வட மாநிலங்களில் இனப்படுகொலை, எல்லையில் வீரர்களின் உயிரிழப்புகள், நக்சலைட்டுகளின் வன்முறை, தமிழக கிராமங்களில் ஆணவ படுகொலை, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, கஜா ஆட்டத்தால் துடித்த உயிர்கள் என்று மரண ஓலங்கள் ஒரு பக்கம் காதை துளைக்கின்றன.
யாரை பின்பற்றுவது?
மற்றொரு பக்கம், அதிகார ஊழல்கள், சிபிஐ ரெய்டுகள், அவர்கள் சந்தித்து வரும் வழக்குகள் போன்றவை நம்மை திக்குமுக்காட செய்துவிட்டன. இதனால் இளைய தலைமுறை யாரை நம்பி பின்செல்வது, யாரை தலைவராக ஏற்பது, யாரை உதாரண புருஷர்களாக பாவிப்பது? போன்ற பல குழப்பங்களும் சூழ்ந்து மனதை துளைத்தெடுத்தன.
கருணாநிதி, வாஜ்பாய்
முக்கியமாக நம் தமிழகத்துக்கென்று இருந்த ஒரே சொத்து, மூத்த மற்றும் முத்தான தலைவர் கருணாநிதியின் மறைவும், தப்பான இடத்தில் ஒரு நல் முத்தாய் தோன்றி மறைந்த வாஜ்பாய் மறைவும் நம்மை ரொம்பவே உலுக்கி போட்டுவிட்டது. இரு பெரும் தலைவர்களின் மறைவு நாட்டை மேலும் அனாதையாக்கி விட்டது.
காலம் செய்த கோளாறு
நாள்தோறும் மிரட்டி விட்டு சென்ற பெட்ரோல், டீசல் விலை, அதன் மூலம் விலைவாசிகள் உயர்வு என்று ஒருபுறம் நாம் கவலையில் கிடந்தால், இது போதாதென்று வேளைகெட்ட கெட்ட வேளையில் மழை பெய்ய, பருவம் தவறி புயல் அடிப்பதும், அதனால் பல துயரங்களுக்கு வித்திட்டு, கடைசியில் காலம்கூட நமக்கு கோளாறு செய்ய ஆரம்பித்தது.
கொடூரங்கள்
இது எல்லாவற்றிற்கும் மேலாக, பின்னணி காரணமாக கள்ளக்காதல்களை வைத்து கொண்டு, பெற்ற சிசுக்களை அவற்றின் தாய்மார்களே கழுத்தை நெறித்து கொன்ற அக்கிரமங்கள் நம்மை நிலைகுலைய வைத்துவிட்டன. போதும்!! இதற்குமேல் கொடூரங்களை தாங்கும் சக்தி நமக்கு இல்லை. 2018-ல் ஆறுதல் தரும் செய்திகளும் மிக மிக குறைவே.
மனிதகுலம்
வரும் ஆண்டிலாவது அரசு நிர்வாகமும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், மக்களை பற்றி கொஞ்சம் கவலைப்பட வேண்டும். விஞ்ஞானிகளையும், மருத்துவர்களையும் ஊக்குவித்து வளர்த்து, புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டால் மனிதகுலம் எண்ணற்ற பயன்களை நிச்சயம் பெறும்.
நிஜங்களை தேட வேண்டும்
இளம் தலைமுறையினர் தங்கள் விளம்பர மோகத்தை – சினிமா மோகத்தை கைவிட்டு. மனித நேயத்தை மேலும் வளர்த்து கொள்ள வேண்டும். போலிகளை கண்டு ஏமாறாமல் – நகல்களை நம்பி மோசம் போகாமல் நிஜங்களை தேடும் பயணத்தை இனியாவது துவக்க வேண்டும்.
வாழ்க்கையின் அர்த்தம்
நம்மைதான் இக்கால, வருங்கால மக்கள் முழுசாக நம்பி இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்து கொள்ள வேண்டும்! மொத்தத்தில் வாழ்க்கையின் அர்த்தத்தையும், உண்மையின் உன்னதத்தையும் புரிந்து கொள்ள அனைவருமே முயல வேண்டும். 2019-ல் நமது எதிர்பார்ப்பு இதுவே!
-tamil.oneindia.com