திருவனந்தபுரம்: சபரிமலையில் பெண்கள் சென்று வழிபாடு நடத்தியதை தொடர்ந்து, கேரளாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
உறுதி
சபரிமலை சன்னிதானத்தில், இன்று அதிகாலை பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர், தேவஸ்தான ஊழியர்கள் செல்லும் வழியாக சென்று வழிபாடு நடத்தினர். இதனையடுத்து நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜைக்கு பின்னர் திறக்கப்பட்டது. 40 வயது மதிக்கத்தக்க பெண்கள், சபரிமலையில் வழிபாடு செய்ததை முதல்வர் பினராயி விஜயன் உறுதி செய்துள்ளார்.
ஆதரவு
இந்நிலையில், சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டதை கண்டித்து, நாளை(ஜன.,3) முழு அடைப்பு போராட்டத்திற்கு சபரிமலை கர்மா சமீதி அமைப்பு, அந்த்ராஷ்டிரா இந்து பரிஷத் அமைப்பும் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்துள்ளது.
மோதல்:
திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன்பு பா.ஜ., மற்றும் ஆளுங்கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. பா.ஜ.,வினர் டயர்களை எரித்தனர். முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். போலீசாருடன் தள்ளுமுள்ளுவிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆலப்புழாவில், பா.ஜ., மாவட்ட தலைவரை கைது செய்தனர்.
சாலை மறியல்
மாநிலத்தின் பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. செங்கனூர், ஆலப்புழாவில் சாலைகளை போராட்டக்காரர்கள் மறித்தனர். அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சூரில் கொடுங்கலூரில் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கொட்டரக்காரா என்ற இடத்தில் போராட்டக்காரர்கள் கடைகளை அடைக்க வலியுறுத்தினர்.
பாலக்காடு மற்றும் கார்கோடு பகுதியில் பெருமளவில் போராட்டம் வெடித்துள்ளது. பத்தனம்திட்டாவில் தனியார் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. கொலேன்சேரியில் கேரள அரசு பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.
-dinamalar.com