சபரிமலை: சபரிமலையில் பெண்கள் புகுந்தது போலீசார் உருவாக்கிய திட்டமிட்ட திரைக்கதை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்த பெண்கள் பம்பையில் இருந்து மலையில் நடந்து செல்லாமல் போலீஸ் வாகனத்தில் சென்றுள்ளனர். இவர்களுடன் கருப்பு உடையில் பக்தர்கள் வேடத்தில் போலீசார் சென்றுள்ளனர். பதினெட்டாம் படி வழி ஏறாமல் பின் வாசல் வழி சென்றுள்ளனர். அங்குள்ள போலீசார் அடையாள அட்டை கேட்டபோது, பெண்களுடன் வந்த போலீசார் எங்கள் விருந்தினர் என கூறியுள்ளனர். பெண்கள் சுவாமி கும்பிடுவதை விட தாங்கள் வந்ததை வீடியோவில் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினர். ஒரு பக்தர், பெண்களிடம் ‘நீங்கள் யார்’ என கேட்ட போது நாங்கள் திருநங்கைகள் என கூறியுள்ளனர்.
அவசரமாக சன்னிதானத்தில் இருந்து கிளம்பி அங்கு மருத்துவமனையில் தயாராக இருந்த ஆம்புலன்ஸில் ஏறி டிராக்டர் செல்லும் பாதையில் சென்றுள்ளனர். அங்கு நின்ற பக்தர்கள் சந்தேகம் எழுப்பிய போது பக்தர் ஒருவரை காட்டுப்பன்றி தாக்கியதாக போலீசார் பொய் கூறினர். பம்பை வந்த பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் வெளியூருக்கு சென்று விட்டனர். இன்னும் அவர்கள் வீட்டிற்கு செல்லவில்லை. அதேபோல் சன்னிதானம் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பே கிளம்பி போலீஸ் பாதுகாப்பில் இருந்துள்ளனர்.
இந்த மொத்த ஆபரேஷனும் 3 பேருக்கு மட்டும் தெரிந்திருக்கிறது. முதல்வர் பினராயி, டி.ஜி.பி, கோட்டயம் எஸ்.பி., ஆகியோர் தேவசம் அமைச்சருக்கு கூட தெரியாமல் இதனை செயல்படுத்தி உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் சன்னிதானத்தில் பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள் ஆழ்ந்து துாங்கிய அதிகாலை நேரத்தை தேர்ந்து எடுத்து ஐதீகத்தை தகர்த்துள்ளனர். இதனால் அவர்கள் பம்பையை விட்டு வெளியே சென்றது வரை வெளியுலகிற்கு தெரியாமல் போயிற்று.
-dinamalar.com