சபரிமலை கடையடைப்பு தோல்வி, கலவரத்தில் ஒருவர் பலி – என்ன நடக்கிறது கேரளாவில்?

இரண்டு பெண்கள் நேற்று புதன்கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ததை ஒட்டி கேரளத்தில் நிகழ்ந்த கலவரத்தில் 55 வயது முதியவர் பலியாகி உள்ளார்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் நேற்று நடந்த கல்வீச்சில் காயமடைந்த அவர், சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவு மரணமடைந்தார்.

நேற்று அதிகாலை சுமார் 3:45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சந்நிதானத்தை அடைந்த பிந்து, கனகதுர்கா என்ற இந்த இரண்டு பெண்களும் பதினெட்டாம் படி வழியாக செல்லாமல் வி.ஐ.பி.க்கள் செல்லும் நுழைவாயில் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இது தீவிரவலதுசாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியது.

இதனைத் தொடர்ந்து இன்று கேரளாவில் முழு கடையடைப்பிற்கு அவர்கள் அழைப்புவிடுத்திருந்தனர்.

கடையடைப்பு

இந்த கடையடைப்பு அழைப்பு வியாழக்கிழமை இயல்பு வாழ்க்கையில் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிகிறது.

சபரிமலை

பெரும்பாலான வாகனங்கள் வழக்கம் போல இயங்குவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோழிக்கோட்டில் இன்று அதிகாலை போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதாகவும், சாலையில் டயர்கள் கொளுத்தப்பட்டதாகவும் பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது.

வணிகர்கள் இந்த கடையடைப்பிற்கு ஆதரவளிக்கவில்லை என்கிறது பி.டி.ஐ.

அதரவும், கருப்பு தினமும்

பா.ஜ.க இந்த கடையடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி வியாழக்கிழமையை கருப்பு தினமாக அனுசரிப்பதாக கூறி உள்ளது.

சபரிமலை

சி.பி.எம். கட்சியினரும், பா.ஜ.கவினரும் நேற்று கேரள தலைமை செயலகம் முன்பு சண்டையிட்டு கொண்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி அவர்களை கலைத்தனர்.

இந்த சூழலின் காரணமாக, கோழிக்கோடு, கண்ணூர், மகாத்மா காந்தி பல்கலைக்கழகங்கள் தேர்வினை தள்ளி வைத்துள்ளன. -BBC_Tamil

TAGS: