‘நெஸ்லே’ மீது நடவடிக்கை: சுப்ரீம் கோர்ட் அனுமதி

புதுடில்லி : நேர்மையற்ற வணிக நடைமுறை, பொய்யான விளம்பரங்கள் மூலம், நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது தொடர்பாக, ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த, 2015ல், ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனம் தயாரித்த, ‘மேகி’ நுாடுல்சில், அதிகளவில் காரீயம் மற்றும் உப்பு கலந்திருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, மேகி நுாடுல்சின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள, மத்திய உணவு தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தில், பரிசோதனை செய்யப்பட்டது. அதில், உப்பு மற்றும் காரீயம் அதிகளவில் கலந்திருப்பது உறுதியானது.

இந்த நுாடுல்சை பயன்படுத்தும் நுகர்வோருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், நாடு முழுவதும், அதன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் பின், நாடு முழுவதும், ‘மேகி’ நுாடுல்ஸ் பாக்கெட் களை, நெஸ்லே நிறுவனம் திரும்பப் பெற்றது. இந்நிலையில், நேர்மை யற்ற வணிக நடைமுறை, தவறான விளம்பரங்கள் மூலம், நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, 640 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக, என்.சி.டி.ஆர்.சி., எனப்படும், தேசிய நுகர்வோர் விவகார தீர்ப்பாணையத்தில், மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வழக்கு தொடர்ந்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.இந்நிலையில், நேற்று இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி, டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நெஸ்லே நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி அளித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

-dinamalar.com

TAGS: