சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை

சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான புத்தக கண்காட்சி இன்று வெள்ளிக் கிழமை, ஜனவரி 4ம் தேதி தொடங்கி விட்டது. இது ’42 வது சென்னை புத்தக கண்காட்சியாகும். சென்னை நந்தனம் பகுதியில் ஒய்எம்சி திறந்தவெளி விளையாட்டரங்கில் புத்தக கண்காட்சி நடக்கிறது. ஜனவரி 4-ம் தேதி முதல் 20 ம் தேதி வரையில் இந்த கண்காட்சி நடக்கிறது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், Booksellers and Publishers Association of South India (BAPASI) புத்தக கண்காட்சியை நடத்துகிறது. வழக்கமாக 13 அல்லது 14 நாட்கள் நடக்கும் புத்தக கண்காட்சி முதன் முறையாக இந்த ஆண்டு 17 நாட்கள் நடக்கவிருக்கிறது.

இந்தாண்டு 500 பதிப்பாளர்கள் தங்கள் கடைகளை விரித்துள்ளனர். 800 க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் உள்ளன. தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, இந்தியாவின் பெரும்பாலான பிராந்திய மொழிகளின் புத்கங்களும் கண்காட்சியில் இருக்கின்றன. இந்த மொழிகளின் பல புதிய எழுத்தாளர்களின் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கின்றன.

வழக்கம் போலவே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளிலும் வாழும் தமிழர்கள் இந்த புத்தக கண்காட்சி குறித்து ஏராளமான தகவல்களை தொடர்ந்து கேட்டு வருவதாகவும், ஆண்டு தோறும் சென்னை வரும் சில ஆயிரம் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்களது பயணத் திட்டங்களை இந்த புத்தக கண்காட்சியை ஒட்டி அமைத்துக் கொண்டுள்ளதாகவும் என்னிடம் கூறினார் BAPASI நிருவாகி ஒருவர். 2018 ம் ஆண்டு ஜனவரி புத்தக கண்காட்சிக்கு 12 லட்சம் பேர் வருகை புரிந்த தாகவும், இந்தாண்டு குறைந்தது 20 லட்சம் பேராவது வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை

முதல் சென்னை புத்தக கண்காட்சி டிசம்பர் 14, 1977 ல் நடந்த து. பபாசி அமைப்புதான் இந்த கண்காட்சியை துவக்கியது. பதினோரு நாட்கள், டிசம்பர் 24 வரையில் இந்த கண்காட்சி நடந்தது. 22 புத்தக அரங்கங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரிஸே – ஏ – ஆஸம் பள்ளியில்தான் கண்காட்சி நடந்தது. அடுத்த சில ஆண்டுகள் கழித்து, புத்தக கண்காட்சி இப் பள்ளியை அடுத்து அமைந்துள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரிக்கு இடம் பெயர்ந்தது. டிசம்பர் 1989 – ஜனவரி 1990 நடந்த 12 வது சென்னை புத்தக கண்காட்சி முக்கியமானது.

இந்த கண்காட்சியில் உலக சுகாதார நிறுவனம், (World Health Organization or WHO) வெளியிட்ட புத்தகங்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் வைக்கப்பட்டன. தன்னுடைய வெள்ளி விழாவை 2002 ம் ஆண்டு சென்னை புத்தக கண்காட்சி கொண்டாடியது. 2007 ம் ஆண்டு எண்ணிக்கை பெருகி வந்த புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் புத்தக கண்காட்சியை காயிதே மில்லத் கல்லூரியிலிருந்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளிக்கு உந்தி தள்ளினர். காரணம் அலை, அலையாய் வரத் துவங்கிய மனிதர்களும், பல்கிப் பெருகி படையெடுத்த வாகனங்களும். இடப்பற்றாக் குறையால் புத்தக கண்காட்சி இடம் மாறியது.

2009 ம் ஆண்டு கண்காட்சி வரலாற்றில் முக்கியமான மைல் கல். புத்தகங்களை பார்க்கவும், வாங்கவும் வந்தவர்களின் எண்ணிக்கை முதன் முறையாக பத்து லட்சத்தை தாண்டியது. 2013 ம் ஆண்டு இப் பள்ளியின் அருகில் தோண்டப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சுரங்கங்களினால் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கிற்கு மாற்றப்பட்டது.

புத்தக கண்காட்சி

பிறகு மீண்டும் ஜார்ஜ் பள்ளிக்கு வந்தது. இந்தாண்டு மீண்டும் புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ திறந்த வெளி அரங்கிற்கு சென்று விட்டது. முதலில் சென்னையில் மட்டுமே நடத்தப் பட்ட BAPASI யின் இந்த புத்தக கண்காடசி பின்னர் திருச்சி, உதகமண்டலம், புதுச்சேரி, திருவனந்தபுரம் என்று சீரான இடைவெளியில் விரிவடைய ஆரம்பித்து, ஆண்டு தோறும் தற்போது மேலே குறிப்பிட்ட நகரங்களிலும் நடந்து கொண்டிருக்கிறது.

இதுதான் சென்னை புத்தக கண்காட்சியின் சுருக்கமான வரலாறு. இது கடந்து போன காலத்தின், ஓரளவு நாம் பெருமை பட்டுக் கொள்ளக் கூடிய வரலாறு தான். சந்தேகமில்லை. இருநூறு ஆண்டு கால அடிமை இந்தியாவின் கல்வி அறிவையும், நாடு விடுதலை அடைந்த கடந்த 70 ஆண்டுகாலத்தில் இந்தியாவும் குறிப்பாக தமிழகமும் பெற்றிருக்கும் கல்வி அறிவின் அளவு கோல்களின்படி பார்த்தால் இது நாம் மார்தட்டிக் கொள்ளக் கூடிய சாதனையாக இல்லாவிட்டாலும், ஒதுக்கித் தள்ள முடியாத சாதனைதான்.

இந்தியாவின் பல மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தின் கல்வி அறிவின் பின் புலத்தில் பார்த்தால், சென்னை புத்தக கண்காட்சிக்கு வருபவர்களின் எண்ணிக்கை கிட்டத் தட்ட இன்று 20 லட்சத்தை தொட்டுக் கொண்டிருப்பது நம்பிக்கை தரும் முன்னேற்றம்தான். .

சென்னை புத்தக கண்காட்சியின் மறக்க முடியாத என்னுடைய சில நினைவுகளில் முக்கியமானது 1994 ம் ஆண்டு ஜனவரி சென்னை புத்தக கண்காட்சி தீக்கிரையானது. ஆம். அந்தாண்டு காயிதே மில்லத் கல்லுரியில் நடந்த புத்தக கண்காட்சி திடீரென்று ஏற்பட்ட தீயினால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது இரவு நிகழ்ந்தது. அதற்கு சில மணி நேரங்கள் முன்பு மாலையில் நான் அங்கு சுற்றிக் கொண்டிருந்தேன். காலையில் ‘தினமணி’ செய்தி தாளை பார்த்த போது இரவு புத்தக கண்காட்சி தீக்கிரையான செய்தி அறிந்தேன். அப்போது நான் ‘மாலைக் கதிர்’ என்ற மாலை நாளேட்டில் முழு நேர நிருபராக இருந்தேன்.

காலை பத்து மணிக்கு காயிதே மில்லத் கல்லூரிக்கு மற்ற சில பத்திரிகையாளர்களுடன் செய்தி சேகரிக்க சென்றேன். கண்ணீரும், கம்பலையுமாக, எல்லாவற்றையும் இழந்து நின்ற பல பதிப்பகத்தாரை பார்த்தேன். அப்போது என்னுள் நான் உடைந்து போனேன். ஆனால் அடுத்த ஆண்டே அந்த பதிப்பகத்தார் வீறு கொண்டு எழுந்து நின்று, போராடி, மீண்டும் வெற்றிப் பாதையில் செல்லத் துவங்கியதை என் அனுபவத்தில் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். 1994 ஜனவரி வரையில் புத்தக கண்காட்சியில் தீயணைப்பு வாகனங்கள் இல்லை.

சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை

அதற்கு பிறகுதான் தீயணைப்பு வாகனங்கள் வந்தன. அன்று மட்டும் தீயணைப்பு வாகனங்கள் இருந்திருந்தால், பல பதிப்பகத்தார்கள் அன்றைய நஷ்டத்தை சந்தித்திருக்க மாட்டார்கள். ”பெரிய, பெரிய தவறுகளை செய்த பிறகுதான், சிறிய, சிறிய உண்மைகள் வாழ்கையில் தெரிய வருகின்றன” என்ற பாரதி யின் வரிகள் தான் எனக்கு அப்போதும், இப்போதும் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறது.

1984 ம் ஆண்டு முதல் சென்னை புத்தக கண்காட்சிக்கு நான் போய்க் கொண்டிருக்கிறேன். கண்காட்சியின் வளர்ச்சியை கடந்த 34 ஆண்டுகாலமாக அங்குலம், அங்குலமாக நான் பார்த்து வருகிறேன். 1988 ம் ஆண்டு பத்திரிகையாளனாக மாறிய பின்னர், இந்த புத்தக கண்காட்சியின் பல புதிய பரிமாணங்கள் எனக்கு தெரிய ஆரம்பித்தன. ஒரு புத்தகம் எப்படி தயாராகிறது, அதனது அடக்க விலை, விற்பனை விலை, எழுத்தாளருக்கு கொடுக்கப்படும் ராயல்டி என்று பல விஷயங்கள் எனக்கு தெரிய வந்தன.

கடந்த 34 ஆண்டுகளிலும் ஒவ்வோர் முறையும் புத்தக கண்காட்சிக்கு குறைந்தது நான்கு முறையாவது போய் வந்ததில் பல புதிய நண்பர்களை பெற்றிருக்கிறேன். அவர்களது தொடர்பால், வாழ்க்கையின் பல புதிய விஷயங்களை கற்றிருக்கிறேன். கற்றுக் கொண்டிருக்கிறேன். எனக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவு என்பதை ஆண்டுதோறும் அறிந்து கொள்ள இந்த புத்தக கண்காட்சியும், அதில் கிடைக்கும் புதிய மனித உறவுகளும் எனக்கு உதவிக் கொண்டிருக்கின்றன.

தமிழ் புத்தகங்கள் மற்றும் தமிழ் பதிப்பாளர்களை பற்றிப் பேசும் போது தமிழகத்தின் நூலகங்களை பற்றி பேசாமல் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவின் நூலக இயக்கங்களில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது. பலருக்கும் தெரியாத ஒரு விஷயம், தமிழக அரசு சாமானிய மனிதர்களிடம் இருந்தும் ஆண்டுதோறும் வசூலிக்கும் வரியில் நூலக வரி என்ற ஒன்றும் இருக்கிறது.

வசூலிக்கும் வரிக்கு ஏற்ப தமிழக அரசு நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்குகிறதா என்று கேட்டால் அது வேறு விவகாரம். ஆனால் கணிசமான அளவுக்கு 2011 ம் ஆண்டு வரையில் தமிழ் பதிப்பகத்தாரிடம் இருந்து புத்தகங்கள் நூலகங்களுக்கு வாங்கப் பட்டிருக்கின்றன. 2011 லிருந்து இதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த எட்டாண்டுகளாக இந்த தொய்வு தொடருகிறது.

நடுவில் இரண்டாண்டுகள் ஓரளவுக்கு புத்தகங்கள் வாங்கப் பட்டன. ஆனால் பின்னர் நிலைமை மீண்டும் 2011 ம் ஆண்டு காலகட்டத்திற்கே சென்று விட்டது. இன்று சிறு மற்றும் நடுத்தர தமிழ் பதிப்பகத்தாரின் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இது இருந்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமை விரைவில் களையப்படுவது தமிழ்ப் பதிப்புலகை மட்டுமல்ல, தமிழகத்தின் அரசு நூலகங்களையும் வலுப்படுத்தும்.

இனி அடுத்து என்ன என்பதுதான் நாம் முக்கியமாக யோசிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது என்றே கருதுகிறேன். சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக பதிப்பாளரும், BAPASI யின் முன்னாள் நிர்வாகிகளில் ஒருவருமான ஜி.ஒளிவண்ண்னிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை

அவர் சில ஆச்சரியமான விஷயங்களை சொன்னார். அதில் முக்கியமானது தமிழ் புத்தகங்களுக்கு சர்வதேச அளவில் விரிவடைய காத்திருக்கும் சந்தை. அவருடைய மொழியிலேயே இங்கே அதனை சொல்லுவது பொருத்தம் என நினைக்கிறேன். ”ஜெர்மனியின் ஃப்ராங்ஃபட் நகரில் நடைபெற்ற 2016 புத்தக கண்காட்சி மற்றும் 2017 ல் லண்டனில் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளுக்கு போயிருந்தேன். இரண்டிலும் உலகின் பல நாடுகளிலிருந்தும், பல மொழி பதிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அங்கு வந்திருந்த ‘பதிப்புரிமை பொறுப்பாளர்களிடம் (Rights Agents) பேசிக் கொண்டிருந்தேன். ரைட்ஸ் ஏஜெண்ட்ஸ் எனப்படும் உரிமை முகவர்கள் யாரென்றால், பெரும்பாலான வெளிநாடுகளில் ஒரு எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தை விற்பனை செய்ய நேரடியாக பதிப்பகத்தாரிடம் போக மாட்டார்.

இந்த உரிமை முகவர்கள்தான் சரியான, பொருத்தமான பதிப்பகத்தாரிடம் எழுத்தாளரளின் படைப்புகளை கொண்டு போய் பதிப்பிக்கச் செய்வார்கள். இந்தியாவில் இதுவரையில் அந்த நிலைமை இல்லை. நேரடியாகவேதான் ஒவ்வோர் எழுத்தாளரும் பதிப்பகத்தாரிடம் தொடர்பில் இருக்கிறார். உரிமை முகவர் என்னிடம் ஆர்வமாக கேட்டது பெண்ணியம் சம்மந்தப்பட்ட நாவல்கள், வரலாறு, இடங்கள், இந்திய கலாச்சாரம் (இதில் இந்தியாவில் உள்ள வெவ்வேறு கலாச்சாரங்களும் அடங்கும்), வரலாறு, கட்டடக்கலை சம்பந்தமான நூல்கள் தமிழில் இருக்கின்றனவா என்பதுதான். மேலே குறிப்பிட்ட விஷயங்களில் பல நாடுகளில், குறிப்பாக, மேலை உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று அப்போது நான் புரிந்து கொண்டேன்” என்று கூறினார்.

புத்தக கண்காட்சி

தொடர்ந்து வேறு சில முக்கியமான விஷயங்களையும் அவர் சொன்னார்; ”தமிழ் பதிப்புலகம் இந்த சந்தையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் அதற்கு அவர்கள் முதலில் செய்ய வேண்டியது தாங்கள் பதிப்பிக்கும் முக்கியமான புத்தகங்களின் ஆங்கிலப் பதிப்பை உடனடியாக் கொண்டு வர வேண்டும்.

ஏனெனில் அப்போதுதான் உரிமை முகவர்கள் அதனது விற்பனை வல்லமையை உணர்ந்து சர்வதேச அளவில் உள்ள பதிப்பகத்தாரிடம் கொண்டு போவார்கள். பிறகு ஆங்கிலத்திலிருந்து இந்த புத்தகங்கள் உலகின் பல மொழிகளிலும் பதிப்பிக்கப்படும். இன்று தமிழகத்தின் சில பதிப்பகத்தாரிடமும், எழுத்தாளர்களிடமும் இந்த செய்தியை சொல்லி, அவர்களை தங்களது புத்தகங்களின் ஆங்கில மொழி பெயர்ப்பை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வருமாறு உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறேன்” என்றும் கூறினார்.

”Authorz” என்ற பெயரில் இதற்கான ஒரு செயலி (app) யை ஒளிவண்ணனும அவரது சில நண்பர்களும் சேர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது விரைவில் செயற்பாட்டுக்கு வரவிருக்கிறது. ஒரு பதிப்பக உரிமையாளர் தன்னுடைய ஒரு புத்தகத்தை சர்வதேச சந்தைக்கு கொண்டு போக விரும்பினால், இந்த செயலியில் தன்னுடைய புத்தகத்தை, தமிழிலேயே ஏற்றம் (upload) செய்து விடலாம். துருவக் கண்ணாடி கொண்டு சதா சர்வ காலமும் உலகின் பல மொழி புதிய புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கும் உரிமை முகவர்கள் இதனை, அவர்களுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் கூட, கண்டு பிடித்து விடுகிறார்கள்.

அதற்கான பல மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர்கள் அவர்களிடம் இருக்கிறார்கள். குறிப்பிட்ட புத்தகம் சர்வதேச விற்பனை சந்தையில் விலை போகும் என்று அவர்கள் உணர்ந்து விட்டால், உடனடியாக சம்மந்தப்பட்ட தமிழ்ப் பதிப்பாளரை நாடி வேற்று மொழி பதிப்புக்கான ஒப்பந்தங்களை போட்டு விடுகிறார்கள். இது தமிழ் பதிப்பகத்தாருக்கு கிடைக்க இருக்கும் பெரு வாய்ப்பாகவே விவரம் அறிந்தவர்களால் தற்போது பார்க்கப் படுகிறது. இதனை எந்தளவுக்கு தமிழ்ப் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனை தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளத் தவறும் பட்சத்தில் ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்றே தற்போதைக்கு தெரிகிறது.

”தொழில் நுட்ப வளர்ச்சி என்ற சுனாமி தமிழ் பதிப்புலகை நோக்கி விரைந்து வந்து கொண்டிருக்கிறது. தங்களை எந்தளவுக்கு இத்தகைய தொழில் நுட்பங்களுக்கு தமிழ் பதிப்புலகம் பயன்படுத்திக் கொள்ளுகிறதோ அதற்கேற்பவே அவர்களது இருப்பு இந்த துறையில் உறுதி செய்யப் படும். அதற்காகத்தான் என்னுடைய பதிப்பக நண்பர்களிடம் பேசும் போதெல்லாம், ”சர்வதேச அளவில் சிந்தியுங்கள்” என்று நான் சொல்லி வருகிறேன்” என்கிறார் ஒளிவண்ணன்.

”Authorz” என்ற பெயரில் இதற்கான ஒரு செயலி வந்தாலும், உடனுக்குடன் ஆங்கில மொழி பெயர்ப்புகளை, குறைந்தபட்சம் முக்கியமான புத்தகங்களையாவது, ஆங்கிலத்தில் கொண்டு வருவது, தமிழ் பதிப்பாளர்களுக்கு பெரும் நன்மை பயக்கும் தன்மை கொண்டதாகவே பார்க்கப் படுகிறது. ஆகவே இந்த இரண்டுக்கும், அதாவது ”Authorz” என்ற செயலிக்கும், ஆங்கில மொழி பெயர்ப்புக்கும் எந்த முரண்பாடும் இல்லை என்றே புரிந்து கொள்ளலாம்.

சென்னை புத்தக கண்காட்சி: தமிழ்ப் புத்தகங்களுக்கு விரியும் உலக சந்தை

இதனை செய்ய தமிழ் பதிப்புலகம் தவறினால் வரக் காத்திருக்கும் ஆபத்து, வெளி நாடுகளில் உள்ள பதிப்பாளர்கள் நேரடியாகவே எழுத்தாளர்களிடம் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவைப்படும் மொழியில் இந்த புத்தகங்களை மொழி பெயர்த்து பதிப்பித்து விடுவார்கள். இது எங்கே போய் முடியும் என்பதை அறிய தமிழ் பதிப்பாளர்கள் விஞ்ஞானிகளாய் இருக்க வேண்டிய அவசியமில்லைதான்.

இவற்றையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில், அதாவது புத்தகங்களின் மேன்மையை உரக்க சொல்லும் இந்த சமயத்தில் புத்தகங்களை பற்றிய வேறு சில கருத்துக்களையும் பதிவிடாமல் இருக்க முடியவில்லை. புத்தகங்களின் மேன்மையை பற்றி ஒருவர் தொடர்ந்து பேசும் போது ரஷ்ய எழுத்தாளர் மக்சிம் கார்க்கி இப்படி சொன்னாராம், ”புத்தகம் என்பது கடந்த காலத்தின் கரிய நிழல். மனிதனே அதனினும் மகத்தானவன்”. இதனது பொருளாக கார்க்கி சொல்லுவது, நீங்கள் பல புத்தகங்களை படித்து அறிவதை விட, ஒரு மனிதனை ஆழமாக பார்ப்பதன் மூலம் அறிவது அதிகம் என்பதுதான்.

இதனை ஜவஹர்லால் நேரு தன்னுடைய சுயசரிதையில் இப்படி சொல்லுவார்; ”புத்தகங்களை படிப்பது நல்லதுதான். ஆனால் புத்தகங்களை படிப்பது என்பது அதனளவிலேயே அதாவது வெறுமனே படிப்பது என்பதில் மட்டுமே பெருமைப்பட ஏதுமில்லை. இரண்டாவதாக நீங்கள் எவ்வளவு புத்தகங்களை படித்தீர்கள் என்பது அல்ல முக்கியம். எத்தகைய தரமான புத்தகங்களை படித்தீர்கள் என்பதுதான் முக்கியம். 17ம் நூற்றாண்டின் டட்ச் மொழி தத்துவஞானி பரூச் ஸ்பினோசா (Baruch Spinoza) தன்னுடைய நூலகத்தில் வெறும் 60 புத்தகங்களைத்தான் வைத்திருந்தார்” என்றார் நேரு.

எவ்வளவு புத்தகங்களை படித்தோம் என்பதல்ல, எப்படி வாழ்ந்தோம், வாழ்கிறோம் என்பதுதானே முக்கியம் … அந்த விதத்தில், இந்த எளிய உண்மையை உணர்த்திய மக்சிம் கார்கிக்கும், ஜவஹர்லால் நேருவுக்கும் நன்றி. -BBC_Tamil

TAGS: