டெல்லி மேகதாது.. தமிழக மனுவை டிஸ்மிஸ் செய்யுங்கள்.. உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு

டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகளை தொடங்குவதற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சமீபத்தில் அனுமதி வழங்கியதை எதிர்த்து அதிமுக எம்பிக்கள், லோக்சபா, ராஜ்யசபாவில் தீவிர போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து, லோக்சபாவில் ஏழு நாட்களுக்கு அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் புதிதாக அணை கட்டுவதாக இருந்தால் காவிரி நதியில் தொடர்பு உள்ள நான்கு மாநிலங்களின் ஒப்புதல் பெறவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், ஆனால் தமிழகத்தின் அனுமதி பெறாமல் கர்நாடகா அணை கட்டுவதற்கு முயற்சிப்பதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது . இதனிடையே இன்று கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், தமிழக அரசின் வழக்கு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம், இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டதால், மீண்டும் அது தொடர்பாக வழக்குகளை விசாரிக்க தேவையில்லை என்று கர்நாடக அரசு கூறியுள்ளது, இரு மாநிலங்கள் நடுவே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: