வேலூரில் பிறமொழியினர் அதிகம்; அவர்களை தமிழராக்க வேண்டும்; சர்ச்சையை ஏற்படுத்திய விஐடி விஸ்வநாதன் பேச்சு

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர் புலவர் பதுமனார். இவர் சமீபத்தில் எழுதிய விழித்தால் விடியும் மற்றும் வடமொழி வழக்கு தெளிவு தமிழ்ச்சொல் அகராதி என்கிற இரண்டு நூல்களின் வெளியிட்டு விழா மற்றும் சிவாலயம் ஜெ.மோகனுக்கு, தமிழ்வேள் விருது பெற்றதற்கான பாராட்டு விழாவினை வேலூர் தமிழ்ச்சங்கம் திருமண மண்டபம் ஒன்றில் ஜனவரி 5ந்தேதி நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் தமிழியகத்தின் தலைவர் விஐடி விஸ்வநாதன் கலந்துக்கொண்டு, பதுமனார் எழுதிய நூல்களை வெளியிட்டார். அதன்பின் அவர் பேசும்போது, நூல் வெளியிட்டு விழா மற்றும் தமிழ்வேள் விருது பெற்றவர்களுக்கு விழா என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்வேல் விருது வழங்குவது தொடங்கப்பட்டு 100 ஆண்டுகளில் கரந்தை தமிழ்சங்கத்தை தோற்றுவித்த உமாமகேஸ்வரன், நீதிகட்சி தோன்ற காரணமாக இருந்த பி.டி.ராஜன், நூல்பதிப்பாளர் மெய்யப்பனுக்கு அடுத்து கணினி பொறியியலில் முதுகலை பட்டம்பெற்றவர் தமிழின் மிதுள்ள பற்றால் தமிழுக்கு வை செய்து வரும் சிவாலயம் மோகனுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தமிழியக்கம் தொடங்கப்பட்டது. அதில் சிவாலயமோகன் இணைந்துக்கொண்டு பொருளுதவியுடன் சேவையும் செய்து வருகிறார்.

தமிழர்கள் உயர்ந்த மொழிக்கு சொந்தக்காரர்கள்  என்ற உணர்வை வீடுகள் தோறும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது தான் தமிழியக்கம். உலகில் 6900 மொழிகள் பேசப்படுகின்றன. இதில் அதிகம் பேசப்படுவது 139 மொழிகள் தான். இதில் பெரும்பான்மை மக்கள் பேசும்மொழி தமிழ்மொழி. உலகில் மூத்த மொழிகள் என்று ஐரோப்பா கண்டத்தில் கிரேக்கமும், லத்தினும், மேற்கு ஆசியாவில் பாரசீகமும், இபுருவும், இந்தியாவில் தமிழும், சமஸ்கிரதமும், சீனாவில் சீனாமொழி என 7 மொழிகள் தான் பேசப்படுகின்றன. இதில் லத்தினும், சமஸ்கிருதமும் வழக்கில் இல்லாமல் போய்விட்டது. பல மொழிகள் எழுத்துவடிவிலும், பேச்சு வழக்கிலும் இல்லாதவையாக மாறிவிட்டன. இன்றும் வழக்கில் இருப்பது தமிழும், சீனமொழியும் தான். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மொழி தமிழ் மொழியாகும். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தொல்காப்பிய நூல் இலக்கிய வடிவில் எழுதப்பட்டதாகும்.

வேலூர் மாவட்டத்தின் ஒருப்பக்கத்தில் தெலுங்கு பேசுபவர்களும், மற்றொரு பக்கத்தில் கன்னடம் பேசுபவர்கள், உருது மொழி பேசுபவர்கள் பரவலாக உள்ளார்கள். அவர்கள் எல்லோரையும் தமிழ் பேசுபவர்களாக மாற்ற வேண்டும். உலகில் உள்ள தமிழர்களை தமிழ் பேசுபவர்களாக மாற்றி ஒன்றாக இணைத்து பார்க்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கு குரானும், கிருஸ்த்துவர்களுக்கு பைபிளும் வேதமறைகளாக உள்ளன. உலகில் அனைத்து மக்களுக்கும் எல்லா காலத்திலும் பொதுமறையாக திருக்குறள் உள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கனியன் பூங்குன்றனார் அந்தகாலத்திலேயே எழுதியுள்ளார்.   இன்று உலகமயமாக்களை பற்றி பேசுகிறோம். ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் திருக்குறளில் அதனை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

அகிம்சை வழியில் நடக்கும் விடுதலை போராட்டம் பற்றி காந்தியடிகள் அறிஞர் டால்ஸ்டாய்க்கு கடிதம் எழுதியிருந்தார். அது தொடர்பாக அவர் எழுதிய பதில் கடிதத்தில் அஹிம்சை பற்றி திருக்குறளில் அப்போதே கூறப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட காந்தியடிகள் அப்போதே திருக்குறளை படிக்க வேண்டும் என்றவர் படித்தபின், அடுத்த அவதாரத்தில் தமிழனாக பிறக்க வேண்டும் என்று கூறினாராம்.

பெயரை பார்த்தே இவர் எந்த நாட்டை சேர்ந்தவரென்று அறிய முடியும். ஆனால் இப்போது தமிழரை அப்படி அறிய முடிவதில்லை. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்லணையை கட்டி கரிகால பெருவளத்தான் தன் பிள்ளைகளுக்கு நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மாவளத்தான் என பெயர்வைத்தான். அந்த நிலையை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதற்கான பணிகளை தமிழியக்கம் செய்யும் என்றார்.

அவர் பேசியதில் வேலூர் மாவட்டத்தில் தெலுங்கர்கள், உருது பேசுபவர்கன், கன்னடர்கள் அதிகரித்துவிட்டார்கள். அவர்கள் தமிழ் பேசுவதில்லை என்கிற பொருள் வரும் அர்த்தத்தில் பேசியுள்ளார் விஸ்வநாதன். வேலூரில் கன்னடர்கள், தெலுங்கர்கள், உருதுமொழி பேசுபவர்கள் அதிகளவில் இருந்தாலும் அவர்கள் வீட்டுக்கு வெளியே தமிழில் தான் பேசுகிறார்கள். இதனை மறைத்து பேசுவது அதிர்ச்சியாக உள்ளது. இத்தனைக்கும் தமிழக, இந்திய வரலாறு, அரசியல் தெரிந்தவர், அவரே இந்த மொழிக்காரர்கள் அதிகரித்துவிட்டார்கள் என்பது இங்குள்ள தமிழர்களிடமிருந்து எங்களை அந்நியப்படுத்துவது போல் உள்ளது. பல தலைமுறைகளாக நாங்கள் இங்கேயே இருப்பவர்கள் எங்களை பிற மொழிக்காரர்கள் என பிரித்து பார்ப்பது வேதனையாக உள்ளது என்கிறார்கள். விஐடி விஸ்வநாதனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

-nakkheeran.in

TAGS: