நீதிமன்ற உத்தரவையும் மீறி எட்டுவழிச்சாலைத் திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தமிழக அரசைக் கண்டித்து, சேலத்தில் விவசாயிகள் ஞாயிறன்று பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் & சென்னை இடையே பத்தாயிரம் கோடி ரூபாயில் எட்டுவழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டம் அமையவுள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 90 சதவீத விவசாயிகள் எட்டுவழிச்சாலைக்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சேபனை மனு அளித்துள்ளனர்.
இந்த திட்டத்திற்கு தடை கேட்டு சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இறுதித்தீர்ப்பு வரும் வரை எட்டுவழிச்சாலை திட்டம் சம்பந்தமான பணிகளை நிறுத்தி வைக்கும்படி இடைக்காலத் தடை விதித்தது. இத்திட்டம் தொடர்பாக அரசுத்தரப்பு ஏதேனும் எழுத்து மூலம் விளக்கம் அளிப்பதாக இருந்தால் ஜனவரி 4ம் தேதிக்குள் அளிக்கலாம் என அவகாசமும் வழங்கியது.
இது ஒருபுறம் இருக்க, இடைக்காலத் தடை உத்தரவு அமலில் இருக்கும்போதே மேடைக்கு மேடை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எட்டுவழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று முழங்கி வந்தார். நில எடுப்பு தொடர்பாக மாவட்ட வருவாய்த்துறை சார்பில் மறு அளவீட்டு எண்களும் அண்மையில் வெளியிடப்பட்டது.
இதெல்லாம் விவசாயிகள் மத்தியில் மீண்டும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டியில் கடந்த மாதம் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்திய விவசாயிகள், எட்டு வழிச்சாலைக்கு எதிராக மீண்டும் உண்ணாவிரதம் இருக்க சேலம் மாநகர காவல்துறையில் அனுமதி கேட்டனர்.
ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். எட்டுவழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடக்கோரியும், காவல்துறையினரைக் கண்டித்தும் இத்திட்டத்தின் தொடக்கப்புள்ளியான உத்தமசோழபுரத்தில் உள்ள விவசாயி மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 6) ஒருநாள் பட்டினி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில், வீரபாண்டி, பூலாவரி, சித்தனேரி, நிலவாரப்பட்டி, குப்பனூர், மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, ராமலிங்கபுரம், எருமாபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ”எட்டுவழிச்சாலைத் திட்டத்தை முற்றிலும் கைவிடும் வரை நாங்கள் பல்வேறு நிலைகளில் போராட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். இந்த திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதல்வர் அவசரம் காட்டுவது ஏன்? என்று தெரியவில்லை.
தானும் ஒரு விவசாயிதான் என்று கூறி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாய நிலங்களை அழிக்கக்கூடிய திட்டத்தைக் கொண்டு வரலாமா? என்பதை விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டும்,” என்றனர்.
-nakkheeran.in