காணாமல் போன ஹரிணி பாப்பா கிடைத்துவிட்டாள்!

காஞ்சிபுரம்: ஹரிணி பாப்பாவை கடத்தியதாக பிரகாஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். நண்பருக்கு குழந்தை இல்லை என்பதால் ஹரிணியை கடத்தி சென்று விலைக்கு விற்றுவிட்டதாகவும் பிரகாஷ் போலீசில் தெரிவித்துள்ளார்.

உத்திரமேரூரை அடுத்துள்ள மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி வெங்கடேசன் – காளியம்மா. இவர்களின் 2 வயது மகள் ஹரிணி 3 மாதங்களுக்கு முன்பு தொலைந்து போய்விட்டாள்.

இதனால் போலீசார் உட்பட தன்னார்வ அமைப்புகள், சமூக நிறுவனங்கள், உட்பட எல்லோருமே இணையதளம் மூலமாகவும் விளம்பரம் தந்து தேடி வந்தனர்.

பொய்யான தகவல்கள்

அப்போதெல்லாம் ஹரிணி இங்கே இருக்கிறாள், அங்கே இருக்கிறாள், இவ்வளவு தொகை வேண்டும் என்ற தகவல்கள் எல்லாம் வர ஆரம்பித்தன. அதனை நம்பி போலீசாரும் அலைந்து திரிந்து விசாரித்ததில் அவை எல்லாமே பொய்யான தகவல்கள் என தெரியவந்தது.

மும்பை ரயில் நிலையம்

அதன்பின்னர் குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, ஹரிணி போன்ற ஒரு குழந்தையை மும்பை ரயில் நிலையத்தில் பார்த்ததாக தனக்கு தகவல் வந்ததாகவும், விரைவில் குழந்தையை மீட்டுவிடலாம் என்றும் தைரியம் சொன்னார்.

குழந்தை கிடைக்கவில்லை

இதையடுத்து போலீசாரும் தனிப்படையுடன் மும்பைக்கு விரைந்தனர். ஆனால் மும்பையிலும் ஹரிணி இல்லை என தெரியவந்தது. இந்த நிலையில்தான், ஹரிணி திருப்போரூர் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைக்கவும், அங்கு சென்று குழந்தையை மீட்டனர்.

தூங்கி கொண்டிருந்தாள்

பிரகாஷ் என்பவர்தான் தனது வீட்டில் ஹரிணி பாப்பாவை வைத்திருந்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, “தன் நண்பனின் மனைவி சங்கீதாவுக்கு நீண்ட காலமாக குழந்தையே பிறக்கவில்லை. சம்பவத்தன்று, குழந்தை ஹரிணி தூங்கிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அவளை கடத்தி சென்றேன். 5 லட்ச ரூபாய்க்கு தம்பதியிடம் விற்றுவிட்டேன்” என்று சொன்னார்.

சங்கீதாவிடம் விசாரணை

இதையடுத்து குழந்தையை 5 லட்ச ரூபாய் தந்து விலைக்கு வாங்கிய சங்கீதாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவரது கணவன் தலைமறைவாகி இருக்கிறார் அவரை தேடி வருவதுடன், இது எல்லாவற்றிற்கும் காரணமான பிரகாஷையும் போலீசார் கைது செய்துள்ளனர். 100 நாட்கள் கழித்து குழந்தை திரும்பவும் கிடைத்துவிட்டதால், போலீசாருக்கு கண்ணீருடன் நன்றியை பெற்றோர் உதிர்த்தனர்.

tamil.oneindia.com

TAGS: