புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகளால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியதாவது: காஷ்மீர் சூழ்நிலையை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அங்கு ராணுவம் மென்மையான மற்றும் கடுமையான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். பயங்கரவாதிகளால், மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் மத்தியில் ஒற்றுமை இல்லாதது தெரியவந்துள்ளது. அவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் வலிமையான சமுதாயமாக இருந்து, ஆதரவு அளிக்க வேண்டும். அவர்கள் ஒற்றுமையாக இருந்தால், எதனையும் சாதிக்க முடியும்.
ஆயுதங்களை போட்டுவிட்டு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கைவிட்டால், பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். வன்முறையை நிறுத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடக்கும். இந்தியாவுக்குள் ஊடுருவ 300 பயங்கரவாதிகள் , எல்லையில் காத்திருக்கின்றனர்.
இந்திய ராணுவம் எப்போதும், மக்களளை தாக்காது. ஆனால், அண்டை நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் செயல்படுகின்றனர். அவர்கள் எல்லை தாண்ட முயல்கின்றனர். இதனால், பொது மக்கள் யார், பயங்கரவாதிகள் யார் என்பதை கண்டறிவதில் சிக்கல் உள்ளது.
காஷ்மீர் இரண்டு நாடுகளுக்கு இடைப்ப்டட விஷயம். இதில், 3வது நாட்டின் தலையீடு தேவையில்லை. நமது விதிகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டே பேச்சு நடக்கும். இதில் நாம் தெளிவாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
-dinamalar.com