ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறப்பு?… ரூ.100 கோடியில் அதிரடி வளர்ச்சி திட்ட பணிகள்!

தூத்துக்குடி:100 கோடி ரூபாய் மதிப்பிலான 6 மேம்பாட்டு திட்டங்களை தூத்துக்குடி வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்தது. அதற்கான விழா, ஸ்டெர்லைட் ஆலை எதிர்புறம் உள்ள ஸ்டெர்லைட் பணியாளர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்புஏற்படுவதாக கூறி, தமிழக அரசு அந்த ஆலையை மூடியது. அதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில், ஆலையை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், ஆலையை திறக்க தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால் தேசிய பசுமைதீர்ப்பாய உத்தரவின்படி ஆலையை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட ஒப்பந்ததாரர்கள், ஸ்டெர்லைட் ஆலை தொழிலாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து முதல்வர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு அளித்தனர்.

6 மேம்பாட்டு திட்டங்கள்

இந்நிலையில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான 6 மேம்பாட்டு திட்டங்களை தூத்துக்குடி வளர்ச்சிக்காக ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்தது. அதற்கான விழா, ஸ்டெர்லைட் ஆலை எதிர்புறம் உள்ள ஸ்டெர்லைட் பணியாளர் குடியிருப்பு பகுதியில் வைத்து நடைபெற்றது.

பணிகள் துவக்கவிழா நடைபெற்றது

விழாவானது, தூத்துக்குடியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, பசுமை தூத்துக்குடி திட்டம் எனும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல் திட்டம், சுற்றுப்புற 15 கிராமத்திற்கு குடிநீர்திட்டம் உள்ளிட்ட திட்டங்களை ஸ்டெர்லைட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு கல்வி

மேலும், மாணவர்கள் நலனுக்காக தரமான கல்வி, சாலை திட்டம், மகளிர் சுயத்தொழில் மேம்பாடு திட்டம், இளைஞர்கள் திறன் வேலை வாய்ப்பு திட்டம், உலகத்தரம் வாய்ந்த பல்நோக்கு மருந்துவமனை உள்ளிட்ட திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆலை திறக்கப்படுவதாக சந்தேகம்

ரூ.100 கோடி மதிப்பில் 6 வகை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதன் மூலம், ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படுகிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போதைய நிகழ்வுகள் அதை தான் வெளிப்படுத்து கின்றனவோ என்ற கருத்துகளும், சந்தேகங்களும் ஆலை எதிர்ப்பாளர்களுக்கும், போராட்டக்குகுழுவினருக்கும் ஏற்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: