மேகதாது அணை கட்ட அனுமதி அளித்த விவகாரத்தில் திடீர் திருப்பம்.. மத்திய அரசு அனுமதிக்கவில்லை என பதில்

டெல்லி: மேகதாது அணை கட்ட அனுமதி அளித்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக மத்திய அரசு அதற்கு அனுமதிக்கவில்லை என உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் சுமார் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கான பணியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இதற்கான ஆரம்பகட்ட ஆய்வு நடத்த கர்நாடகா அரசின் சார்பில் மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு இருந்தது. அணைகட்ட தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போது ஆய்வுக்கு மட்டும்தான் அனுமதி அளிக்கிறோம். அணைக்கு அல்ல என்று மத்திய அரசு பதில் அளித்தது.

அணை அமையும் இடம்

இந்த நிலையில் மேகதாது அணை தொடர்பாக செயல் திட்ட வரைவு அறிக்கையை மத்திய நீர்வளத்துறை ஆணையத்திடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து இருந்தது. அணை அமையும் இடம், அணைக்கான திட்ட மதிப்பீடு, அணையின் பலன்கள் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய இந்த வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

உத்தரவை மீறி

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எந்த ஆற்றிலும் அணை கட்டக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மத்திய அரசு அனுமதி அளித்ததை அடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

நீதிமன்ற அவமதிப்பு

அதன் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது மத்திய அரசு கூறுகையில் மேகதாது விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்ததில் நீதிமன்ற அவமதிப்பு இல்லை.

அனுமதி

சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும். மற்றபடி மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி ஏதும் தரவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

tamil.oneindia.com

TAGS: