திருச்சபைகளில் நடக்கும் பாலியல் குற்றங்கள் – உள்ளிருந்தே எழும் எதிர்ப்பு குரல்

கன்னியாஸ்திரி மற்றும் ஒரு தேவாலய மதகுருவுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கை மற்றும் விளக்க கடிதம் பல கேள்விகளை எழுப்புகிறது.

தன்னை 2014 – 2016 இடையிலான காலக்கட்டத்தில் 13 முறை பாலியல்ரீதியாக தாக்கினார் என கன்னியாஸ்திரி ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஜலந்தரை சேர்ந்த பிஷப் ஃப்ரான்கோ முலக்கல் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு (2018) ஜூன் மாதம் 44 வயதுடைய கன்னியாஸ்திரி காவல் துறையில் புகார் அளித்தார். பாலியல் ரீதியாக தாம் துன்புறுத்தப்பட்டதாகவும், கத்தோலிக்க தேவாலயத்தில் இது தொடர்பாக பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி இருந்தார்.

பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான அந்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அருட்சகோதரி லூஸி மற்றும் அருட்தந்தை அகஸ்டின் போராட்டத்தை ஒருங்கிணத்தனர்.

இதனை தமக்கு எதிரான செயல்பாடாக கருதி விளக்கம் கோரி உள்ளது தேவாலயம்.

என்ன நடந்தது? என்ன விளக்கம் கோரினார்கள்? இவர்கள் அளித்த விளக்கம் என்ன? – இது தொடர்புடைய அனைவரிடமும் பேசினோம்.

‘தவறு செய்யவில்லை’

“அவர்கள் நினைப்பது போல நான் எந்த தவறும் செய்யவில்லை. பாதிக்கப்பட்ட அந்த கன்னியாஸ்திரிக்கு நான் உதவியது மிகவும் சரி. தேவ ஊழியம் செய்யும் அனைத்து பெண்களும் அந்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதனை செய்யவில்லை. அது அவர்கள் தவறு என் தவறல்ல” என்று லூஸி பிபிசி இந்தி சேவையிடம் கூறினார்.

மேலும் அவர், “அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதனை செய்யட்டும். அதுகுறித்து எந்த கவலையும் எனக்கில்லை” என்றார்.

கன்னியாஸ்திரிக்கு எதிராக நடந்த பாலியல் குற்றங்களுக்கு எதிராக கொச்சியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த போராட்டத்தில் லூஸி கலந்துகொண்டார்.

சேவ் அவர் சிஸ்டர்ஸ்’

அந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தது ‘சேவ் அவர் சிஸ்டர்ஸ்’ அமைப்பு. அந்த கன்னியாஸ்திரி முறையாக தேவலாய நிர்வாகிகளிடம் தமக்கு நேர்ந்த அநீதிகள் குறித்து முறையிட்டார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்தே அவர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

தேவாலய அமைப்பு முறையின்படி, தேவாலயத்தின் ஊழியர்கள் புகார் செய்தால், அந்த குற்றச்சாட்டுகள் தேவாலய உயர் அதிகாரிகளால் போலீஸுக்கு தெரிவிக்கப்படும். ஆனால், அவர்கள் போலீஸுக்கு தெரிவிக்காததை அடுத்தே, அந்த கன்னியாஸ்திரி நேரடியாக புகார் அளித்தார்.

அருட்தந்தை அகஸ்டின்
அருட்தந்தை அகஸ்டின்

பாதிக்கப்பட்ட அந்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக அவருடன் பணிபுரிந்த ஐந்து கன்னியாஸ்திரிகள் எர்ணாகுளத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டதை அடுத்து அந்த போராட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

முப்பது மணி நேரம் அந்த பிஷப்பை விசாரித்த கேரள போலீஸின் சிறப்பு படை அவரை செப்டம்பர் 22ஆம் தேதி கைது செய்தது. இப்போது அந்த பிஷப் பிணையில் இருக்கிறார்.

தேவாலயம் எடுத்த நடவடிக்கை

நவம்பர் 11ஆம் தேதி அங்கமாலேவை சேர்ந்த அப்போஸ்தலிக் நிர்வாகி பிஷப் ஜேக்கப் போராட்டம் குறித்து விளக்கம் கேட்டு ‘சேவ் அவர் சிஸ்டர்ஸ்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை அகஸ்டினுக்கு நோட்டீஸ் கொடுத்தார்.

அகஸ்டின், “தேவாலய நிர்வாகத்திற்கு களங்கம் உண்டாக்குவதற்காக பிரசாரத்தை மேற்கொள்ளவில்லை. உண்மையில் தேவாலயத்திற்கு நற்பெயர் ஏற்படுத்தவே இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளோம்” என்று குறிப்பிடுகிறார்.

போலீஸ் விசாரணைக்குப் பின் ஆயர் ஃப்ரான்கோ
போலீஸ் விசாரணைக்குப் பின் ஆயர் ஃப்ரான்கோ

ஆனால், பிஷப் ஜேக்கப், அந்த பிரசாரத்திலிருந்து அதாவது ‘சேவ் அவர் சிஸ்டர்ஸ்’-லிருந்து அகஸ்டினை விலகும்படி கூறி இருக்கிறார்.

என்ன விளக்கம் அளிக்க போகிறேன்?

“நான் இன்னும் அந்த நோட்டீஸிற்கு விளக்கம் அளிக்கவில்லை. மதகுருமார்கள் கூட்டம் ஜனவரி 18ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதன் பின்னரே, இது குறித்து விளக்கம் அளிப்பேன்” என்கிறார் அகஸ்டின்.

“பாலியல் ரீதியான குற்றங்களை பொறுத்துக் கொள்ள முடியாது என்று போப் பிரான்சிஸ் மிகவும் தீர்க்கமாக கூறுகிறார். பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல, அதனை மூடி மறைப்பதும் கத்தோலிக்க தேவாலய நிர்வாகத்தால் இனி பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால், இங்கு கேராளாவில் இந்த தேவாலயம் இதற்கு நேர் எதிர்திசையில் பயணித்து கொண்டிருக்கிறது” என்கிறார் அகஸ்டின்.

Save Our Sisters

“எதிர்காலத்தில் கன்னியாஸ்திரிகள் தங்களுக்கு எதிராக கேள்வி எழுப்புவார்கள் என தேவாலயங்கள் அஞ்சுகின்றன. ஏனெனில், இப்போது தேவாலயங்களில் ஒருவிதமான அடிமை முறை நிலவுகிறது. அவர்களுக்கு கேள்வி கேட்க உரிமையில்லை. அவர்கள் சுதந்திரமாக முடிவெடுக்க, நடமாட எந்த உரிமையும் இல்லை. இவை அனைத்தும் கீழ்படிதல் என்ற பெயரில் நிகழ்கிறது” என்கிறார் அகஸ்டின்.

அருட்சகோதரி லூஸியிடம் மே 2015 இடமாற்ற உத்தரவுக்கு கீழ்படியாமல் போனது, கவிதை புத்தகம் வெளியிட்டது, கார் ஓட்ட பயின்றது, ஓட்டுநர் உரிமம் பெற்றது, கார் வாங்கியது மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக பல கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் மேலாக செப்டம்பர் 20ஆம் தேதி ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டது தொடர்பாகவும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது தொடர்பாகவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இதற்கு பதிலளித்த லூஸி, “இவை அனைத்தும் எனது உரிமை; மனித உரிமை என பதிலளித்துள்ளார்.”

என்ன நடந்து கொண்டிருக்கிறது?

அருட்தந்தை அகஸ்டின் கூறுகிறார், “கிறித்துவிற்கு கீழ்படிதலை, தேவாலய நிர்வாகத்திற்கு கீழ்படிவதாக பார்க்கிறார்கள். எனது கேள்வி என்னவென்றால், ஏன் பெண்கள் கத்தோலிக தேவாலயத்தில் அடிமைகள் போல நடத்தப்படுகிறார்கள். ஏசுவிற்கு முன்பு ஆண், பெண் பாகுபாடு இல்லாத போது அவர்கள் ஏன் இரண்டாம், மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். ஏசுவிற்கு முன் அனைவரும் சமம், அருட்தந்தை கன்னியாஸ்திரி போன்ற வேறுபாடுகள் இல்லை” என்கிறார்.

இறையியல் வல்லுநர் மற்றும் பெண்ணியவாதியுமான கொச்சுராணி ஆப்ரஹாம் பிபிசியிடம், “அடிப்படையில் இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள கத்தோலிக திருச்சபைகளில், நிர்வாக படிநிலை அமைப்பு வலுவாக உள்ளது. எப்படி கன்னியாஸ்திரி செயல்பட வேண்டும், எப்படி மதகுரு செயல்பட வேண்டும் என்று மத நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. அந்த நிர்வாக அமைப்பு படிநிலையில் ஆண்களே இருப்பதால், பெண்களுக்கு கடினமாக போய்விடுகிறது” என்கிறார்.

திருச்சபைகளில் நடக்கும் பாலியல் குற்றங்களும், அதற்கெதிரான கேள்விகளும்

“சமய வாழ்க்கை என்பது இந்தியாவில் பெண்களுக்கு கடினமான ஒன்றாக ஆகிவிடுகிறது. இங்கு ஆணாதிக்க மனோபாவம்தான் நிகழ்கிறது” என்கிறார்.

“கேரளாவில் ஒருங்கிணைக்கப்பட்ட வனிதாசுவரில் ஏன் சல்வார் அணிந்து கலந்துகொண்டீர்கள் என அந்த அருட்சகோதரி கேட்கப்படுகிறார். இதுவே அவரை தண்டிப்பதற்கு போதுமான ஒன்றாக திருச்சபை நினைக்கிறது. ஆனால், ஆண்கள் எந்த உடை வேண்டுமானாலும் அணிந்து கொள்ளலாம் என நினைக்கிறது” என்கிறார் கொச்சுராணி.

“ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் பரந்த மனப்பான்மை நிலவுகிறது. ஆனால், இங்கு அவ்வாறாக இல்லை. அவர்கள் ஆடுகள் போல நடந்துகொள்ள வேண்டும் என்றே விரும்புகிறார்கள்” என்கிறார்.

தேவாலயங்கள் மதகுருக்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளுடன் உரையாட வேண்டிய நேரமிது என்கிறார் கொச்சுராணி.

அருட்சகோதரி லூஸீ மற்றும் அருட்தந்தை அகஸ்டினின் செயல்கள் தேவலாயத்திற்கு களங்க ஏற்படுத்திவிட்டதா அல்லது நற்பெயர் கொண்டு வந்திருக்கிறதா?

சைரோ மலபார் தேவாலயம் சார்பாக வெளியிடப்படும் ‘லைட் ஆஃப் ட்ரூத்’ சஞ்சிகையின் ஆசிரியர் அருட்தந்தை பால், “நீங்கள் நியாயத்தின் பக்கம், உண்மையின் பக்கம் நிற்கும் போது, அழுத்தங்கள் வரும், தொந்தரவு வரும். ஏசுவுக்கும் வந்தது, அவர் அதனை எதிர்கொண்டுதான் வாழ்ந்தார், மடிந்தார்” என்கிறார். -BBC_Tamil

TAGS: