டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 5 வீரர்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தி உள்ளது.
இந்திய எல்லையில், பாகிஸ்தான் ராணுவம், அவ்வப்போது அத்துமீறுவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 11ம் தேதி, ஒரு மேஜர் உட்பட 2 இந்திய ராணுவ வீரர்கள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டனர். ரஜவுரி மாவட்டத்திலுள்ள எல்லைப் பகுதியில் இந்த தாக்குதல் அரங்கேற்றப்பட்டது.
இதையடுத்து, இந்திய ராணுவம் தனது பதிலடி வேட்டையை ஆரம்பித்துள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 5 பேரை இந்திய ராணுவத்தினர் இன்று சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
இந்திய ராணுவத்தின் பதிலடி தாக்குதலில், இரு நாட்டு எல்லைக்கோட்டு பகுதி அருகே அமைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானின் 7 பதுங்கு குழிகளையும் இந்திய ராணுவம் அழித்துள்ளது.
இதுபற்றி வடக்கு மண்டல ராணுவ கமாண்டர் ரன்பீர் சிங் கூறுகையில், இந்திய ராணுவம் எப்போதுமே, பாகிஸ்தான் ராணுவத்தைவிட ஒருபடி உயரத்தில்தான் இருக்கிறது. பாகிஸ்தான் ராணுவம் வெடிகுண்டுகளை பயன்படுத்தி நமது மீது தாக்குதல் நடத்துவது புதிது கிடையாது. ஆனால், இதை எதிர்கொள்ள, இந்திய ராணுவம் உரிய வகையில் தயாராக இருக்கிறது என்றார் அவர்.