சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற 2 பெண்களுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றம்

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த கனகதுர்கா, பிந்து ஆகிய இரு இளம் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, கேரளாவை சேர்ந்த கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரு பெண்கள், ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இவர்கள் சிசிடிவி உதவியால் அடையாளம் தெரிந்துவிட்ட நிலையில், இந்து அமைப்புகளின் மிரட்டலுக்கு உள்ளானார்கள். இருவருமே வீடு திரும்ப முடியாமல் தலைமறைவாகினர்.

இந்த நிலையில், சில தினங்கள் முன்பாக வீடு திரும்பிய கனகதுர்காவை அவரது மாமியார் அடித்து துன்புறுத்தியதாக தகவல் வெளியானது. இந்த சம்பவங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மூலமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு கவனத்திற்கு, இரு பெண்களும் கொண்டு சென்றனர். இன்று இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கனகதுர்கா, பிந்து ஆகிய இரு பெண்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இதற்கு மாநில அரசே பொறுப்பு என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: