இலங்கை கடற்படை கப்பல் மோதி இறந்த மீனவரின் உடலுக்கு மத்திய அமைச்சர் அஞ்சலி

திருச்சி: இலங்கை கடற்படை கப்பல் மோதி கடலில் விழுந்து இறந்த மீனவர் உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே உள்ள இலந்தைகூட்டத்தை சேர்ந்தவர் முனியசாமி (68). மீனவரான இவர் கடந்த 12-ஆம் தேதி 4 பேருடன் விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.

அதே பகுதியில் மேலும் சில படகுகளும் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை எச்சரித்ததோடு, தங்களது கப்பலால் படகுகளில் மோதினர்.

மேலும் படகுகளில் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் பறித்துக் கொண்டனர். முன்னதாக இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் மோதியதில் முனியசாமியின் படகில் இருந்த அவர் உள்பட 4 பேரும் கடலில் விழுந்தனர்.

கடலில் தத்தளித்த மற்ற 3 பேரையும் மீட்ட இலங்கை கடற்படையினர் முனியசாமியை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே மீட்கப்பட்ட 3 பேரையும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கூறி கைது செய்தனர். அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாயமான மீனவர் முனியசாமியை தொடர்ந்து தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி அறிந்த முனியசாமியின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். முனுசாமியை எப்படியாவது கண்டுபிடித்து தரவேண்டும் என்று அவர்கள் அரசுக்கும் கோரிக்கை வைத்தனர்.

இந்தநிலையில் முனியசாமியின் உடல் நேற்று முன்தினம் அங்குள்ள கடற்கரையில் ஒதுங்கியது. அதனை மீட்ட இலங்கை அரசு பிரேத பரிசோதனை செய்தது. இது பற்றி தமிழக அரசுக்கும் தகவல் தெரிவித்தது. மேலும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

அதன்படி இலங்கையில் இருந்து மீனவர் முனியசாமியின் உடல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் மீனவரின் உடல் சொந்த ஊருக்கு ஆம்புலன்ஸ் வேனில் கொண்டு செல்லப்பட்டது. இறந்த மீனவர் முனியசாமிக்கு முனீஸ்வரி, சண்முகபிரியா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் முனீஸ்வரி திருமணமாகி தனது கணவருடன் அந்தமானிலும், சண்முகபிரியா தனது கணவர் சண்முகநாதனுடன் உள்ளூரிலும் வசித்து வருகிறார்கள். மனைவி பூங்கோதை ஏற்கனவே இறந்துவிட்டார்.

tamil.oneindia.com

TAGS: