படகில் கேரளாவில் இருந்து நியூசி.பயணம்.. 230 தமிழர்கள் மாயம்?

முன்னம்பம்:நியூசிலாந்து செல்ல கேரளாவில் இருந்து படகில் சென்ற 230 பேர் மாயமானதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஜனவரி 11ம் தேதி, கேரளாவின் முன்னம்பம் துறைமுகத்திலிருந்து 50 பேரின் உடைமைகளை திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்களூர் கோயிலில் கேரள போலீசார் கைப்பற்றினர். படகு வழியாக நியூசிலாந்து செல்லும் முயற்சியில் 50 பேர் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் சந்தேகித்தனர்.

இந் நிலையில், அடுத்தடுத்த நாட்களில் கொச்சி அருகே உள்ள முன்னம்பம் துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டைகள், துணிகள், ஆவணங்கள் மூலம் 230 பேர் சென்றிருக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. அவர்களில் பெரும்பான்மையானோர் தமிழர்கள் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நியூசி.சென்றதா படகு?

காவல்துறை தகவலின் அடிப்படையில், இப்படகு நியூசிலாந்தை நோக்கி ஜனவரி 12 புறப்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகின்றது. அதே நேரத்தில், கடந்த 19ம் தேதி, தெற்கு டெல்லியைச் சேர்ந்த பிரபு என்ற 29 வயது தமிழ் இளைஞரை கடத்தலில் தொடர்புடையவராக கேரள காவல்துறை கைது செய்துள்ளது.

படகின் விலை ஒரு கோடி

ஆட்கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், ரவீந்திரா, சாந்த குமாருடன் தொடர்புடைய நபராக கைது செய்யப்பட்டவர் இருக்கக்கூடும் என்று அறியப்பட்டுள்ளது. கேரள காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில், இப்பயணத்திற்காக தேவ மாதா என்ற படகை 1.02 கோடி ரூபாய்க்கு வாங்கியது அம்பலமாகியுள்ளது.

நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம்

அதில் டெல்லியில் வசிக்கக்கூடிய சரஸ்வதி மற்றும் சுந்தரலிங்கம் என்ற தமிழ் தம்பதியின் இரண்டு மகன்களும் சென்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு நபரும் சுமார் 1 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை இப்பயணத்திற்கு செலுத்திய இருக்கக்கூடும் என்று தெரிகிறது.

230 உயிருடன் உள்ளனரா?

அவர்களின் முழு விவரங்கள், எங்கிருந்து வந்துள்ளனர் என்ற தகவல்கள் காவல்துறையிடம் முழுமையாக இல்லை. எனவே, 230 பேரும் தற்போது உயிருடன் உள்ளனரா என்ற அச்சமும் எழுந்துள்ளது.

அனுமதிக்காத ஆஸி.

கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளை நோக்கிய படகுப் பயணங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கடலில் காணாமல் போகியுள்ளனர். 2013ம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் வருபவர்களை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று கூறியுள்ளது.

வரவேற்கும் நியூசி.

அதே சமயம், 2020யிலிருந்து அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை 1000 த்திலிருந்து 1500 ஆக நியூசிலாந்து உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அத்துடன், ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் உள்ள அகதிகளை தங்கள் நாட்டில் குடியமர்த்தவும் நியூசிலாந்து கோரிக்கை விடுத்து வருகின்றது. இதை மனதில் கொண்டு, ஆட்கடத்தல்காரர்கள் நியூசிலாந்தை நோக்கிய பயணத்தை திட்டமிட்டிருக்கக்கூடும் என்று தெரிகிறது.

-tamil.oneindia.com

TAGS: