ஐயப்பனை தரிசித்து திரும்பிய கனகதுர்காவுக்கு வீட்டில் இடமில்லை.. அரசு விடுதியில் தஞ்சம்!

மலப்புரம்: சபரி மலைக்கு பெண்களும் சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சபரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த கனக துர்காவுக்கு வீட்டில் இடமில்லை என்று குடும்பத்தார் மறுத்து விட்டதால் அவர் அரசு விடுதியில் தங்கியுள்ளார்.

சபரிமலை தீர்ப்புக்குப் பிறகு பல பெண்களும் சபரிமலைக்குப் போகின்றனர். ஆனால் அங்கு இந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பால் பலரால் உள்ளே போக முடியவில்லை. சிலர் மட்டும் உள்ளே போய் விட்டு வரலாறு படைத்து விட்டனர். அதில் ஒருவர்தான் மலப்புரம் கனகதுர்கா.

சபரிமலை சன்னதியில் இடம் பிடித்த கனகதுர்கா தற்போது தனது சொந்த வீட்டில் இடமிழந்து தெருவுக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரை வீட்டுக்குள் சேர்க்க முடியாது என்று குடும்பத்தார் கூறி விரட்டி விட்டு விட்டனர்.

சம்பிரதாயத்தை மீறி விட்டார்

காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சடங்கு, சம்பிரதாயங்களை கனக துர்கா மீறிவிட்டார் என்று, அவரை அவரது குடும்பத்தார் சாடியுள்ளனர். மேலும், மாமியார், மருமகளுக்குள் நேர்ந்த கைகலப்பால், கனக துர்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கனக துர்காவை மீண்டும் திட்டி உள்ளனர் அவரது குடும்பத்தார்.

இது பாவமா

பெண்கள் செல்லக்கூடாது என்று காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் சம்பிரதாயங்களை மீறி, கனக துர்கா சபரி மலை ஐயப்பனை தரிசித்து பாவம் செய்துவிட்டார் என்றும், ஊரறிய கனக துர்கா பாவ மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவரை வீட்டுக்குள் அனுமதிப்போம் என்றும் குடும்பத்தார் கூறியதாகத் தெரிகிறது. அப்போதுதான் கனக துர்காவின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் கூறியதாகத் தெரிகிறது.

அரசு விடுதியில் தஞ்சம்

இதையடுத்து, வேறு வழியில்லாத கனக துர்கா பெரிந்தலமன்னா பகுதியில் உள்ள அரசு விடுதியில் தற்போதைக்கு தஞ்சம் அடைந்துள்ளார். எனினும், காவல்துறையினரிடம் கனக துர்கா புகார் அளித்து உள்ளதாகவும் தெரிகிறது. கனக துர்காவின் கணவர் அரசு ஊழியர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசு உதவுமா

கனகதுர்காவுக்கு சொந்த வீட்டிலேயே இடம் மறுக்கப்பட்டு அவர் அரசு விடுதியில் தஞ்சமடைந்திருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கேரள அரசு உதவுமா. குடும்பத்தினருடன் சேர்த்து வைக்குமா, பாதுகாப்பு தருமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

tamil.oneindia.com

TAGS: