லக்னோ:உபி.யில் யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்ற முதல் 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு 78 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு தொடர்ந்து என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை போலீஸார் சுட்டுக்கொல்வதாக குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதுவரை 78 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
யோகி அரசின் என்கவுன்ட்டர் விவகாரம் அம்மாநிலத்தில் அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் எதிரிகள், தமக்கு வேண்டாதவர்களை பாஜக அரசு எசுட்டுக்கொல்வதாக எதிர்க்கட்சியான சமாஜ் வாதி கட்சி விமர்சித்து வருகிறது.
இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு உ.பி அரசு தயாரித்துள்ள சாதனை பட்டியலில் என்கவுன்ட்டரையும் இணைத்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு உ.பி. அரசின் சாதனைகள் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஒவ்வொரு துறை வாரியாக சாதனைகள் இடம் பெற்றுள்ளன. இதில் அம்மாநில காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அதிர வைக்கும் முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அதில் உள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:உ.பி முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற முதல் 16 மாதங்களில் 3000க்கும் அதிகமான என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 78 கிரிமினல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
7,043 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 838 கிரிமினல்கள் காயம் அடைந்துள்ளனர். 11,981 கிரிமினல்களின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளனர். சிறப்பு காவல் படையினரால் 9 கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். மேலும் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சராசரியாக ஒரு நாளைக்கு 6 என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு, 14 கிரிமினல்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 4 கிரிமினல்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.