கருத்த மேனி.. எளிய தோற்றம்.. வெள்ளந்தி பேச்சு.. செய்த சாதனை இமயம் தொடும்.. இவர்தான் சின்னப்பிள்ளை!

சென்னை: “கடை கண்ணிக்கு எங்கியும் போக மாட்டேன். எப்பவும் புள்ளைகளோட சேர்ந்து கிளித் தட்டு, பாண்டி, பொம்மை சட்டி, விளையாடுவேன். எங்க அப்பா பசின்னு யாரு வந்தாலும் உட்காரவெச்சு சோறுபோட்டு, வெத்தலை பாக்கு போடவெச்சு, அவங்களுக்கு பஸ்ஸுக்குக் காசும் கொடுத்து அனுப்பி வைக்கும். இதை பார்த்துதான் எனக்கு உதவுற குணமே வந்துச்சு” என்று அன்று சொன்னவர்தான் இன்று பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள மதுரை சின்னபுள்ள.

கருத்த மேனி.. எளிமை தோற்றம்.. மதுரைக்கே உரிய மொழிவளம்.. இயல்பாக வெளிப்படும் வார்த்தைகள்… இவைகளுடன் இவர் செய்திருக்கும் சாதனைகள்தான் எத்தனை எத்தனையோ!!

வீட்டில் செல்லமாக வளர்ந்த சின்னபிள்ளைக்கு கல்யாணமாகி 2 குழந்தைகளும் பிறந்தன. ஆனால் ஒருபக்கம் கணவன் நோயில் விழ, தந்தையின் மரணம் அடுத்து நிகழ.. நிலைகுலைந்த சின்னபிள்ளை கூலி வேலைக்கு தன்னை தயார் செய்து கொண்டார். பிள்ளைகளை குடும்பத்தை காப்பாற்றினார். ஆனால் இப்படி தன் குடும்பத்துக்காக மட்டும் சுயநலமாக மகளை வளர்க்கவில்லை அவரது தந்தை.

கடன்கள்

நம்மால என்ன முடியுமோ அதை அடுத்தவங்களுக்கு தந்து உதவணும்மா என்று சொல்லியதை கையாள தொடங்கினார். கிராம மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினார். களஞ்சியம் என்ற மகளிர் சுய உதவிக் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். அதிக வட்டிக்கு வெளியில் கடன் வாங்கி கஷ்டப்படும் பெண்கள், அந்த கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் ஒவ்வொரு நாளையும் பயத்துடன் கழித்துவரும் பெண்கள் போன்றவர்களை சந்தித்தார்.

களஞ்சியம்

அவர்களிடம் சென்று சிறுசேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினார். இப்போது கிட்டத்தட்ட 2, 589 சுய உதவிக் குழுக்களை உருவாக்கினார். வெறும் 10 பேரோடு தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் இப்போது கிட்ட 5 லட்சத்திற்கும் மேல் பெண்கள் களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார். இந்த விஷயம்தான் வாஜ்பாய் கையினால் ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் என்ற விருதினை 2001-ம் ஆண்டு வாங்க வைத்தது.

தலைகனம் இல்லா மனிதன்

அனைவருக்கும் வழக்கம்போல் மகிழ்ச்சியுடன் விருது வழங்கி வந்த வாஜ்பாய், சின்னபிள்ளைக்கு தரும்போது மட்டும் அவரது முகத்தை உற்று பார்த்தார். முகம் முழுவதும் பூரிப்பும், ஆச்சரியமும் வாஜ்பாய்க்கு நிரம்பியிருந்தது. தன்னைவிட வயதில் இளையவர் என்பதை பார்த்த மாத்திரத்திலேயே வாஜ்பாய்க்கு தெரிந்திருக்கவே செய்தாலும், சேவை கண்ணை மறைத்து அந்த அம்மாவின் காலிலேயே தலைகனம் இல்லா அம்மாமனிதரை விழ வைத்தது. கரகோஷம் அரங்கை குலுங்க வைத்து, நாட்டையே அதிர வைத்தது.

சம்பந்தி

வாஜ்பாயை போலவே கருணாநிதியும் சின்னபிள்ளைக்கு ஒரு விருது தந்தார். அப்போது சின்னபிள்ளையை “சம்பந்தி” என அழைத்து அவரை உச்சி குளிர வைத்தார். ஆனால் கருணாநிதியும், வாஜ்பாயும் மறைந்தபோது சின்னபிள்ளையின் அழுகையை யாராலும் அடக்க முடியவில்லை.

வாஜ்பாய், கருணாநிதி

நாட்டின் இரு பெரும் மூத்த தலைவர்கள் வாழ்த்திய சின்னபிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது வழங்குவதில் நாட்டு மக்களுக்கு சந்தோஷம்தான். இந்த விருது கிடைத்ததை பற்றி சின்னபிள்ளை சொல்லும்போது, “விருது வாங்கறது எனக்கு சந்தோஷம்தான். பிள்ளைங்க எல்லாம் சுகாதாரமா இருக்கணும். சத்தான சாப்பாட்டை சாப்பிடணும். நல்லா படிக்கணும்.

ஷக்தியை பார்க்கிறேன்

படிச்சிட்டு அவங்கவங்க ஊருக்கு சேவை செய்யணும். இதுதான் என் ஆசை. அதேமாதிரி வறுமைக்கு எதிராக என் போராட்டம் தொடர்ந்துட்டே இருக்கும். முதல்ல இந்த குடிபோதையை ஒழிக்கணும். கந்துவட்டி கொடுமை இல்லாம பண்ணனும். இதுதான் என் லட்சியமே” என்கிறார் சின்னபிள்ளை. சின்னப்பிள்ளையின் வடிவத்தில் நான் ‘ஷக்தி’யைப் பார்க்கிறேன் என்று வாஜ்பாய் அன்று சொன்னதில்தான் எவ்வளவு அர்த்தம் உள்ளது!!

tamil.oneindia.com

TAGS: