மதுரை: மதுரையில் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்லை நாட்டினார்.
தோப்பூரில் ரூ. 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு தெரிவித்தது. அதில் 750 படுக்கை வசதி, 100 எம்பிபிஎஸ் கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக, தந்தை பெரியார் திராவிடர் கழக அமைப்புகள், மே 17 இயக்கம் உள்ளிட்டவை கருப்புக் கொடி ஏந்தியும் சாலை மறியல் போராட்டம் நடத்தியும் எதிர்ப்பை தெரிவித்தன. வைகோ தலைமையில் கருப்பு பலூன்களும் பறக்கப்பட்டன.
மதுரை வந்த பிரதமர்
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரை மண்டேலா நகரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வந்தார்.
வாழ்த்துகள்
அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் கட்சியினரின் வாழ்த்துகளையும் பெற்றார்.
பங்கேற்ற பிரமுகர்கள்
விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜே பி நட்டா, பியூஸ் கோயல், பொன் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டம்
இதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து கருப்பு கார் மூலம் தோப்பூர் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் அருகே நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.