எவரும் கொடுக்காத வாக்குறுதி! அனைவருக்கும் குறைந்தபட்ச சம்பளம் உறுதி.. காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!

டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தல் இப்போது களைகட்ட தொடங்கி இருக்கிறது. பிரியங்கா காந்தியின் வருகைக்கு பின் காங்கிரஸ் புத்துயிர் பெற்றுள்ளது.

இந்த நிலையில் அதிரடியாக தற்போது காங்கிரஸ் குறைந்தபட்ச பொதுவான வருமானம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதுவரை எந்த அரசும் செய்யாத அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

என்ன இது

பொதுவான குறைந்தபட்ச வருமானம் என்பதை ஆங்கிலத்தில் Universal Basic Income ( UBI) என்று அழைப்பார்கள். இதன்படி நாம் என்ன வேலை பார்த்தாலும், எந்த பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் குறைந்தபட்ச சம்பளம் ஒன்று வழங்கப்படும். அதாவது இந்தியாவில் சம்பளம் வாங்காத நபர் ஒருவர் இருக்கவே மாட்டார். இது உலகில் சில நாடுகளில் மட்டும் நடைமுறையில் உள்ளது.

காங்கிரஸ் அறிமுகம்

இதைத்தான் காங்கிரஸ் கொண்டு வர உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச வருமானம் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும். நாட்டில் ஏழைகளே இருக்க கூடாது, என்றுள்ளார்.

ராகுல் டிவிட்

இதுகுறித்து ராகுல் காந்தி செய்துள்ள டிவிட்டில், ”இதுவரை எந்த அரசும் செய்யாத விஷயத்தை நாங்கள் செய்ய போகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்க திட்டம் கொண்டு வர போகிறோம். பசி மற்றும் வறுமையை ஒழிக்க இந்த திட்டம் பெரிய உதவியாக இருக்கும். 2019 தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் இந்த வாக்குறுதியை நிறைவேற்றும்.

பாஜக திட்டம்

முன்னதாக பாஜக இந்த திட்டத்தை தனது தேர்தல் வாக்குறுதியில் அளிக்கலாம் என்று இருந்ததாக தகவல்கள் கசிந்தது. அதேபோல் சிக்கிமில் சில நாட்களுக்கு முன்புதான் குறைந்தபட்ச வருமானம் அறிமுகம் செய்யப்படும் என்று அம்மாநில ஆளும் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி அறிவித்தது. தற்போது காங்கிரஸ் அதை தேர்தல் வாக்குறுதியாக கூறியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: