தெலுங்கானா : தொலைந்த 24 ஆயிரம் குழந்தைகள் மீட்பு

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், ‘ஆப்பரேஷன் முஸ்கான்’ எனப்படும், காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் சிறப்பு திட்டத்தின் கீழ், 24 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் வகையில், ‘ஆப்பரேஷன் முஸ்கான்’ எனப்படும், சிறப்பு திட்டம், 2015ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை, நான்கு கட்டங்களாக இந்த சிறப்பு அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஐந்தாம் கட்டமாக, காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் சிறப்பு நடவடிக்கை, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து, தெலுங்கானா போலீஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: மாநிலத்தில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்கும் சிறப்பு நடவடிக்கையின் ஐந்தாவது கட்ட பணிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில், 466 சிறுமியர் உள்பட, 2,119 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இவர்களில், 1,303 பேர் அடையாளம் காணப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்; மீதமுள்ள, 816 குழந்தைகள், பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் இந்தக் குழந்தைகள் மீட்கப்பட்டனர். பிச்சை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட, குழந்தைத் தொழிலாளர்களாக வேலை பார்த்த குழந்தைகளும் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக, 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையில், போலீசாருடன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினர், அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். மாநில போலீசின், ‘மொபைல் ஆப்’ மூலமாகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், இந்தக் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை நடந்துள்ள, நான்கு கட்ட நடவடிக்கைகளின்போது, 22 ஆயிரம் குழந்தைகளும், ஐந்தாவது கட்டத்தில், 2,000 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-dinamalar.com

TAGS: