அமெரிக்காவில் கைதான 129 மாணவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை

அமெரிக்காவில் சமீபத்தில் விசா மோசடி செய்து படிக்க வந்ததாகக் கூறி 129 இந்திய மாணவர்கள் கைது செய்யப் பட்டிருந்தனர்.

தற்போது இவ்விவகாரத்தில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. 2017 ஆமாண்டு அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் படிப்பதற்காக மட்டும் 249 763 இந்திய மாணவர்களும், 481 106 சீன மாணவர்களும் வந்துள்ளனர்.

இவர்களில் பலர் வெளிநாடுகளில் இருந்து போலியான தகவல்களுடன் அமெரிக்காவுக்கு வந்து கல்வி விசா பெற்று பல வேலைகளில் சேர்ந்து உழைக்கத் தொடங்குவதுடன் அமெரிக்காவில் அனுமதியின்றி குடுயேறி விடுவதாகவும் அமெரிக்கக் குடியுரிமை துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இதை அடுத்து இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்களைக் கண்டு பிடிக்க முதலாவதாக டெட்ராய்ட் பார்மிங்டன் ஹில்ஸ் பகுதியில் ஒரு பல்கலைக் கழகத்தில் திடீர் தேடுதல் நடத்தப் பட்டது. இதில் 130 மாணவர்கள் சிக்கியதாகவும் ஒருவரைத் தவிர மற்றைய அனைத்து 129 பேரும் இந்தியர்கள் எனவும் தற்போது இவர்கள் குடியுரிமைத் துறை அதிகாரிகளால் கைது செய்யப் பட்டு சிறைகளில் அடைக்கப் பட்டுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை செய்தி வெளியாகி உள்ளது.

தற்போது இவ்விவகாரத்தில் தலையிட்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அரசியல் ரீதியாக அமெரிக்கத் தூதரகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், ‘விசா மோசடி மூலம் அமெரிக்காவுக்கு வந்த மாணவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் அனைவரையும் ஒரே மாதிரி அரசு பார்க்கக் கூடாது. இந்திய மாணவர்கள் உடனடியாக விடுவிக்கப் பட்டு கண்ணியமாக நடத்தப் பட வேண்டும். மேலும் இவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்திக்க அனுமதி அளிப்பதுடன் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பவும் கூடாது.’ எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

-4tamilmedia.com

TAGS: