கோவிலில் ரூ.10 கோடி மதிப்பிலான 3 தங்க வைடூரிய கிரீடம் கொள்ளை!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவிந்தராஜூலு பெருமாள் கோவிலில் ரூ.10 கோடி மதிப்பிலான தங்க வைடூரிய கிரீடம் நகைகள் கொள்ளை போனது குறித்து கோவில் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி ரெயில் நிலையம் அருகே திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோவிந்தராஜூலு பெருமாள் கோவில் உள்ளது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முதலில் கோவிந்தராஜூலு பெருமாளை தரிசனம் செய்த பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்வது ஐதீகம்.

திருப்பதி பஸ் நிலையம், ரெயில் நிலையம் அருகிலேயே கோவில் உள்ளதால் உள்ளூர் பக்தர்கள், வெளியூர் பக்தர்கள் என தினமும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்வார்கள்.

இதே கோவிலில் பிரம்மோற்சவ விழா மற்றும் திருவிழா காலங்களில் சாமி வீதிஉலா நடைபெறும் போது ஏராளமான தங்க, வைர, வைடூரியம் நகைகள் அணிவித்து அலங்காரம் செய்வார்கள்.

சாமி வீதி உலா முடிந்த உடன் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து அறையில் பூட்டி வைக்கப்படும்.

பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தினமும் இரவு பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து சாமி நகைகளை கணக்கெடுத்து சரிபார்ப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்றிரவு 9 மணியளவில் திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் சாமி நகைகள் உள்ள அறையை திறந்து கணக்கெடுத்தனர். அப்போது சாமிக்கு அணிவிக்கும் 3 தங்க வைடூரிய கிரீடங்கள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அறை முழுவதும் தேடிபார்த்தனர். எங்கும் கிரீடம் இல்லை. வெங்கடேசபெருமாள் கிரீடம் 528 கிராம், ஸ்ரீதேவி கிரீடம் 405 கிராம், பூதேவி கிரீடம் 415 கிராம் என மொத்தம் 1 கிலோ 351 கிராம் மற்றும் வைர, வைடூரியம் பதிக்கப்பட்ட கிரீடங்கள் என கூறப்படுகிறது. மொத்தம் 3 தங்க கிரீடமும் சேர்த்து 1348 கிராம் ஆகும். இந்த கிரீடத்தில் பழங்கால தங்க நகைகள், வைரம் பதிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ண தேவராயர் இந்த தங்க கிரீடங்களை கோவிலுக்கு வழங்கியுள்ளார். அப்போதைய மதிப்பு ரூ. 1 கோடி. தற்போது ரூ.10 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஞான பிரகாசம் திருப்பதி எஸ்.பி. ஆபீசில் புகார் செய்தார். எஸ்.பி. அன்புராஜன் மற்றும் போலீசார் கோவிலுக்கு சென்று நகை பாதுகாப்பு அறை மற்றும் கோவிலில் வைக்கப்பட்ட சி.சி.டிவி. 12 கேமரா பதிப்புகளை ஆய்வு செய்தனர். நேற்று மதியம் நடந்த கல்யாண உற்சவத்தின் போது 3 தங்க கிரீடமும் இருந்துள்ளது.

திருப்பதி கோவிந்தராஜூலு பெருமாள் கோவிலில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

போலீசார் சோதனையில் கல்யாண உற்சவம் நடைபெறும் மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டிவி. கேமரா கடந்த ஒரு மாதமாக பழுதாகி இருந்தது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் பிரதான அர்ச்சகர்கள் 3 பேரிடமும், கோவில் ஊழியர்கள் சிலரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து எஸ்.பி. அன்புராஜன் கூறுகையில்:- கோவிலில் சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சந்தேகப்படும் படியானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறையில் நகைகள் இருந்ததால் வெளியாட்கள் எடுத்து செல்ல வாய்ப்பு இல்லை. சந்தேகம் உள்ள கோவில் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று அல்லது நாளைக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

இந்த நிலையில், சாமி கிரீடம் கொள்ளை போன தகவல் திருப்பதி முழுவதும் பரவியதால் ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு குவிந்தனர்.

மெட்டல் டிடெக்டர் கொண்டு கோவில் வளாகத்தில் சோதனை நடத்திய போலீசார்.

பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பிரசித்திபெற்ற கோவிந்தராஜூலு பெருமாள் கோவிலில் சாமி கோவில் கிரீடம் கொள்ளை போன சம்பவம் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு திருப்பதி அலிப்பிரி அருகேயுள்ள கோதண்டராமர் சாமி கோவிலில் சாமி நகைகள் கொள்ளை நடந்தது.

அப்போது நடந்த போலீஸ் விசாரணையில் அந்த கோவிலின் பிரதான அர்ச்சகரே சாமி நகைகளை திருடியத கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-athirvu.in

TAGS: