லக்னோ : கள்ளச்சாராயம் குடித்ததால் உ.பி., மற்றும் உத்திரகாண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
மேற்கு உ.பி.,யின் சகரன்பூர் மாவட்டத்தில் 36 பேரும், கிழக்கு உபி.,யின் குஷிநகரில் 8 பேரும், உத்திரகாண்டில் 28 பேரும் கள்ளச்சாராயம் குடித்ததன் காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், முதலில் உத்திரகாண்ட்டை சேர்ந்தவர்கள் தான் இந்த கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். சகரன்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தினர் சிலர், அண்டை மாநிலமான உத்திரகாண்டிற்கு இறுதிசடங்கில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். அப்போது அவர்களும் கள்ளச்சாராயத்தை குடித்துள்ளனர். பின்னர் தங்கள் கிராமத்திற்கு கடத்தி வந்து, விற்றுள்ளனர். இதனால் மேலும் சிலர் அதனை வாங்கிக் குடித்துள்ளனர். முற்றிலும் தடை செய்யப்பட்ட இந்த கள்ளச்சாராயம் பீகாரில் காய்ச்சப்பட்டு, கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுவதாகவும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படுவதாகவும் உ.பி., அரசு அறிவித்துள்ளது. இச்சம்பவம் காரணமாக, கள்ளச்சாரம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் நடவடிக்கை எடுக்காத போலீஸ் அதிகாரிகள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி பல இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
-dinamalar.com