பாட்னா : பீகார் மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது போன்று, நாடு முழுவதற்கும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, மது இல்லாத இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த நிதீஷ் குமார் கூறியதாவது: உத்தரபிரதேசம் மற்றும் உத்திரகண்ட் மாநிலங்களில் கள்ளச்சாராயம் குடித்து 100க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் தன்னை மிகவும் பாதித்துவிட்டது. கள்ளச்சாராயம் மற்றும் மது பழக்கத்தினால், ஏழை மற்றும் நடுத்தர வசதி கொண்ட மக்களே பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு மாநில முதல்வர்கள், தங்களது மாநிலங்களில், மதுவிலக்கை கொண்டுவரும் நடவடிக்கைகளை துவக்க வேண்டும்.
அகிலேஷ் செய்யவில்லை :
பீகார் மாநிலத்தில் 2016ம் ஆண்டு முதலே, மதுவிலக்கு அமலில் உள்ளது. இங்கு நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். உத்தரபிரதேச மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்துமாறு 2016ம் ஆண்டே சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பின் உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால், அவர்கள் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமும் இதே கோரிக்கையை தற்போது வைக்கிறேன்.
மோடியிடம் கோரிக்கை :
மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த, மத்திய அரசு உத்தரவிடமுடியாது என்ற போதிலும், பிரதமர் மோடி, பா.ஜ. ஆளும் மாநிலங்களில் மதுவிலக்கை தடை செய்ய உத்தரவிட வேண்டும். மாநில முதல்வர்கள், தங்களது மாநிலங்களில், மதுவிலக்கை கொண்டுவரும் நடவடிக்கைகளை துவக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான், மது இல்லாத இந்தியா உருவாகும் என்று நிதீஷ் குமார் கூறினார்.
-dinamalar.com