காஷ்மீரில் தீவிரவாதிகள் வெறிச்செயல்.. வெடிகுண்டுத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.

புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் 350 கிலோ வெடி மருந்து நிரப்பிய காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற கான்வாய் பஸ் மீது மோதச் செய்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளான்.

இதில், ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 44 பேர் வீர மரணம் அடைந்தனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், பாதுகாப்புத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு நாளை காலை 9.15-க்கு கூடி இதுபற்றி ஆலோசிக்க உள்ளது.

70 பஸ்கள்

தாக்குதலுக்கு உள்ளான பஸ், ஜம்முவிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. ரிசர்வ் போலீஸ் படையின், மொத்தம் 70 பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. பஸ் மீது வாகனத்தால் மோதப்பட்டதும், அருகே மிகப்பெரிய சத்தத்தோடு மர்ம பொருள் வெடித்தது. இதையடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தமும், கிரானைட் வெடிக்கும் சத்தமும் கேட்டதாக அப்பகுதியில் இருந்த மக்கள் தெரிவிக்கிறார்கள்.

தீவிரவாதிகள் பொறுப்பேற்பு

இதனிடையே, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த அடில் அகமது என்ற தீவிரவாதி தாக்குதலில் ஈடுபட்டுள்ளான். அடில் அகமது கடந்த வருடம்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் சேர்ந்தவன் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 20 வருடங்களில் காஷ்மீரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இதுவாகும்.

ஓமர் அப்துல்லா கண்டனம்

இதனிடையே, தீவிரவாத தாக்குதலுக்கு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஓமர் அப்துல்லா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், பள்ளத்தாக்கில் இருந்து மோசமான செய்தி வந்து சேர்ந்துள்ளது. ஐஇடி குண்டு வெடிப்பில், பல சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. நான் இந்த தாக்குதலை மிக கடுமையான வழியில் கண்டிக்கிறேன். காயமடைந்தோருக்கும், பலியானோர் குடும்பத்தினருக்கும், நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தலைவர்கள் கண்டனம்

இதேபோல, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இந்த தாக்குதலுக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். மத்திய, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஜம்மு காஷ்மீர் உயர் காவல்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். மேலும், தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் ராஜ்ராத் சிங் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் கடும் கண்டனம்

ஜம்மு – காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சிஆர்பிஎப் வீரர்கள் மீது கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாடிய அவர், உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாளை கூட்டம்

பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நாளை காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு நேபாள பிரதமர் கே.பி.ஷர்மாஒளி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என அமெரிக்க தூதர் கென் ஜஸ்டர் உறுதியளித்தார்.

tamil.oneindia.com

TAGS: