புல்வாமா தாக்குதலுக்கு கடும் விளைவை சந்திக்க நேரிடும்- பயங்கரவாதிகளுக்கு மோடி எச்சரிக்கை!

புல்வாமா மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி பாதுகாப்பு படை வீரர்களை கொன்றதற்கு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என பயங்கரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் வழியாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பொதுமக்களின் வாகனங்களுடன் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 78 வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். இவர்கள் அனைவரும் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மொத்தம் 2,547 வீரர்கள் வாகனங்களில் சென்றனர்.

அவந்திப்போரா என்ற இடத்தில் நேற்று மாலை சென்றபோது வீரர்கள் சென்ற ஒரு வாகனத்தின் மீது பயங்கரவாதிகளின் தற்கொலை படை கார் மோதியது. அந்த காரில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு இருந்தன. கார் மோதியதும் பயங்கர சத்தத்துடன் காரும் வீரர்களின் வாகனமும் வெடித்து தீப்பிடித்து எரிந்தன. இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த 40 வீரர்கள் உடல் சிதறி பலியானார்கள். பல வீரர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் பற்றி தகவல் அறிந்ததும் மத்திய அரசு கடும் அதிர்ச்சி அடைந்தது. பிரதமர் மோடி உடனடியாக கண்டனம் தெரிவித்தார். இன்று காலை அவர் டெல்லியில் மத்திய மந்திரி சபையின் அவசர கூட்டத்தை கூட்டி, நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின்னர் பிரதமர் மோடி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டெல்லி – வாரணாசி இடையே அதிநவீன சொகுசு ரெயிலான ‘வந்தே பாரத்’ ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டு கடும் எச்சரிக்கை விடுத்தார். அவர் பேசியதாவது:-

காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு எனது அஞ்சலி. ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது. நமது வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் முழு நம்பிக்கை உள்ளது.

இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சக்திகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அனைத்து நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும். இந்த தாக்குதலுக்கு எதிராக நாடு ஒன்றிணைந்து நிற்கிறது.

நாடு தற்போது மிகவும் கோபமாக உள்ளது. இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் ரத்தமும் கொதித்துப் போய் உள்ளது. இந்த செயலுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும்.

பயங்கரவாதிகள் மிகப் பெரிய தவறு செய்துவிட்டார்கள். இதன் பின்னணியில் இருப்பவர்கள் மிகப்பெரிய விலை கொடுப்பார்கள். இனி அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியை சந்திக்கும்.

இதுபோன்ற தாக்குதலால் இந்தியா ஒரு போதும் அச்சத்தில் உறைந்துவிடாது, சதி செய்து இந்தியாவை சீர்குலைக்கும் கனவு நிறைவேறாது. அவர்களது சதி- நாசவேலையை கோடிக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து முறியடிப்பார்கள். எந்த நோக்கத்திற்காக வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தார்களோ அவர்களது நோக்கம் விரைவில் நிறைவேறும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

உள்துறை மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இன்று மேற்கு வங்காளத்தில் சுற்றுப்பயணம் செய்வதாக இருந்தது. அவர் தனது பயணத்தை ரத்து செய்து விட்டு உடனடியாக ஸ்ரீநகர் விரைந்தார். அங்கு காஷ்மீர் கவர்னருடன் பயங்கரவாதிகள் தாக்குதல் பற்றியும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை பற்றியும் ஆலோசனை நடத்தினார்.

ஏற்கனவே காஷ்மீரின் உரி பகுதியில் ராணுவ முகாம் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது.

அதுபோல் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும், எந்த நேரத்திலும் தாக்குதல் நடைபெறலாம் என்றும் தெரிகிறது. இதற்காக எல்லைப் பகுதியில் வகிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

-athirvu.in

TAGS: